இந்தியாவின் புகழ்பெற்ற மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்ஸியின் 30க்கும் மேற்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது!
இந்தியாவில் உள்ள ரான்பாக்ஸி நிறுவனத்தின் இரண்டு தொழிற்சாலைகளில் மருந்துகளை தயாரிப்பதில் உள்ள தரமின்மை காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க உணவு - மருந்துப் பொருள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகப் பெயர் அல்லாத பொதுப் பெயரில் உள்ள ஆண்டிபயாடிக், கொழுப்புச் சத்து குறைப்பு மருந்துகளே இப்பட்டியலில் பெரிதும் அடங்கும்.
இம்முடிவினால் மருந்துப் பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் ஏற்படாது என்றும், மற்ற நிறுவனங்களிடம் இருந்து பெற்று அது சரி செய்யப்படும் என்றும் அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இம்முடிவிற்கு ரான்பாக்ஸி நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம், ரான்பாக்ஸி உற்பத்தி செய்யும் ஹெச்.ஐ.வி. எதிர்ப்பு மருந்துகள் உட்பட பிற குறைந்த விலை மருந்துகளின் தரம் பற்றி அந்த நிறுவனம் பொய் தகவல் அளித்ததாக அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2006ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்துப் பொருள் நிர்வாகம், இந்தியாவில் உள்ள ரான்பாக்ஸி தொழிற்சாலை ஒன்றில் உற்பத்தி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.