உலக அளவிலான பொருளாதார நெருக்கடி இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்றுவதற்காக அஸ்வின் குமார் வந்துள்ளார்.
அவர் நேற்று நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய அளவு பாதிப்பு இருக்காது.
இந்த நெருக்கடியால் இந்தியாவிற்கு சிறிது பாதிப்பு இருக்கும். இதை முடிந்த அளவு தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்தியாவின் பொருளாதாரம் வலிமையானது. இந்த நிதி ஆண்டில் வளர்ச்சி 8 விழுக்காடாக இருக்கும். 400 மில்லியன் நடுத்தர வருவாய் பிரிவு நுகர்வோர் உள்ளனர். அத்துடன் இந்தியா அதிக முதலீட்டில் உள்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு உள்கட்டுமான வசதிகளுக்காக 450 பில்லியன் டாலரை செலவழிக்க உள்ளது.
அதே நேரத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி, அதன் உச்ச கட்ட நிலையை அடைந்து விட்டது. ஆனால் இந்தியா வளர்ச்சி கட்டத்தில் உள்ள நாடாக உள்ளது என்று கூறினார்.