வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றி, வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்புடன் இந்திய வங்கிகள் சங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் வருகின்ற 24, 25 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்வதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருப்பது நியாயமற்றது என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது
இதுதொடர்பாக நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கித் துறையின் பல்வேறு சீர்திருத்தங்களை எதிர்த்து வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு நாடு முழுவதும் வருகின்ற 24, 25 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளன.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் சில விளக்கங்களை அளிக்க அரசு விரும்புகிறது. அரசு கொள்கையுடன் தொடர்புடைய கோரிக்கைகள் குறித்து அரசின் நிலைப்பாடு அவ்வப்போது தெளிவாக்கப்பட்டு உள்ளது.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் விடயத்தில் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தை தனியார்மயமாக்க அரசு பரிந்துரை செய்யவில்லை. பொதுத்துறை வங்கிகளின் 51 விழுக்காட்டிற்கும் அதிகமான பங்குகளை அரசே வைத்துக் கொள்ளும். மேலும், பொதுத்துறை வங்கிகளின் தனித்தன்மை பாதுகாக்கப்படும்.
நிதிச்சேவைகள் குறித்து ரகுராம் ராஜன், அன்வருல் ஹோடா ஆகியோர் தலைமையிலான குழுக்கள் அளித்துள்ள பரிந்துரைகள் பல்வேறு நிலையில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த குழுக்களின் பரிந்துரைகள் பற்றி, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
பொதுத்துறை வங்கிகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடன் இணைக்கும் விடயத்தில் வங்கிகளின் நிர்வாகமே தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே அரசின் நிலை.
இதில், அரசு ஒரு பொது பங்குதாரர் என்ற முறையில் ஆதரவளிக்க மட்டுமே செய்யும். இந்த விடயத்தில் மத்திய அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை.
உலகளவில் இந்திய வங்கிகள் போட்டித்தன்மையை மேம்படுத்த வங்கிகள் ஒருங்கிணைப்பு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகளை இணைப்பது குறித்து ஒருமித்த கருத்து ஏற்பட சில வங்கி நிர்வாகங்கள், அதன் வங்கி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
தற்போதைய நிலையில் வங்கிகளிடம் இருந்து இணைப்பு குறித்து அரசுக்கு எந்தவித பரிந்துரையும் வரவில்லை.
வங்கி வரைமுறைச் சட்டப்பிரிவு 12 (2)-ஐ நீக்குவது குறித்த விடயத்தில் 2005-ம் ஆண்டு மே 13ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தால் பொதுத்துறை வங்கிகளின் வாக்குரிமைக்கு எந்த பாதிப்பும் கிடையாது. வாக்களிக்கும் உரிமையில் சட்டத்திற்கு உட்பட்ட நிலையில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்களைப் பொருத்தவரை 10 விழுக்காடாகவும், இதர தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைப் பொருத்தவரையில் ஒரு விழுக்காடாகவும் இருக்கும்.
தனியார் துறை வங்கிகளின் பங்குதாரர்களுக்கு அவர்கள் வைத்துள்ள பங்குத்தொகை அடிப்படையில் வாக்களிக்கும் உரிமை அளிப்பதற்கு இந்த சட்டதிருத்தம் அவசியம் என்று அரசு கருதுகிறது. இதுவே உலக அளவில் பின்பற்றப்படும் நடைமுறை ஆகும். மேலும் இந்த சட்டத்தில் 12-பி என்ற புதிய பிரிவும் சேர்க்கப்பட்டு உள்ளது.
இதன்மூலம் ஒரு வங்கி ஓட்டுரிமையையோ, 5 விழுக்காடு அல்லது அதற்கு மேல் பங்குகளையோ பெறும்போது ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டு உள்ளது. இந்த அனுமதி வழங்குவதற்கான சட்டதிருத்தங்களை உருவாக்க ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
வங்கி ஊழியர்களின் ஓய்வூதிய விருப்பம், கருணை அடிப்படையில் வேலை, ஊதிய சீரமைப்பு ஆகிய கோரிக்கைகள் தொழில் உறவு தொடர்பானவை ஆகும்.
2008-ம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பிற்கும், இந்திய வங்கிகள் சங்கத்திற்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்த பிறகும்கூட கடந்த 2ஆம் தேதியன்றும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
ஓய்வூதிய விருப்பம் தொடர்பாக ஏற்படக்கூடிய நிதி சிக்கல்கள் குறித்து ஆராய்வதற்காக வல்லுனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கருணை அடிப்படையில் வேலை பற்றி நீதித்துறை வழிகாட்டுதலின்படி ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊதிய சீர்திருத்தம் குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள வேலைநிறுத்தம் நியாயமற்றது, தேவையில்லாதது என்று அரசு கருதுகிறது.
இந்த வேலைநிறுத்தத்தால் பொதுத்துறை வங்கிகளுக்கு தினமும் பரிவர்த்தனை செய்யும் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் சிரமப்படுவார்கள். இந்த வேலை நிறுத்தம் பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர்களை தனியார் வங்கிகளை நோக்கி வழியனுப்பும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கும்.
இந்திய வங்கிகள் சங்கத்திற்கும் வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பிற்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு ஏற்பட வேண்டும் என்றும் வேலைநிறுத்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அரசு விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது.