கடன் அட்டைகளுக்கு (கிரெடிட் கார்ட்) 30 விழுக்காடுக்கு மேல் வட்டி விதிக்க கூடாது என்ற உத்தரவை எதிர்த்து, வெளிநாட்டு வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்த வழக்கு பற்றிய விபரம் வருமாறு :
தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றம், கடன் அட்டையை பயன்படுத்தி கடன் வாங்கியவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்த தவறினால், நிலுவையில் உள்ள கடனுக்கு 30 விழுக்காட்டிற்கு மேல் வட்டி விதிக்க கூடாது என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்தும், வட்டியை நிர்ணயிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது என்று வெளிநாட்டு வங்கிகள் உச்ச நீதி மன்றத்தில் வழங்கு தாக்கல் செய்துள்ளன.
இந்த வழக்கை சிட்டி பாங்க், ஹாங்காங் அண்ட் சாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் (ஹெச்.எஸ்.பி.சி.), ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் பாங்க், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பாங்க் ஆகிய வெளிநாட்டு வங்கிகள் தொடர்ந்துள்ளன.
உச்ச நீதி மன்ற நீதிபதி பி.என். அகர்வால் முன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடன் அட்டைகளின் நிலுவை கடன் மீதான வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதற்கு உரிமை உண்டு. இதற்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது.
இந்க வட்டிக்கு உச்ச வரம்பு விதிப்பது, ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு எதிரானது. ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகிதத்தையும், கடன் அளவு விதிகளையும், பின்பற்றாமல் முன்னுரிமை அல்லாத தனிநபர் கடனுக்கு வட்டியை நிர்ணயிக்க வங்கிகளுக்கு உரிமையுண்டு.
ரிசர்வ் வங்கி 2008, ஜீலை 23ஆம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், சிறிய அளவு தனி நபர் கடனுக்கு வங்கிகள் அதிகபட்சம் வசூலிக்கும் வட்டியை அறிவிக்க வேண்டும். இது கடன் அட்டை மீதான கடனுக்கும் பொருந்தும் என குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளன.
இந்திய வங்கிகள் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில், வங்கிகள் விதிக்கும் கடனுக்கான வட்டி விகிதங்கள் நீதிமன்ற பரிசீலினைக்கு உட்பட்டு அல்ல என்று கூறியுள்ளன.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.அகர்வால், நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கும் மனு மீது பதிலளிக்க தாக்கீது அனுப்பும் படி உத்தரவிட்டார்.