வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஆரோக்யா மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் [Universal Arogya Medical Insurance Scheme] திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனிநபர் வருடத்திற்கு காப்பீடு தொகையாக (பிரிமியம்) வருடத்திற்கு ரூ. 300 செலுத்த வேண்டும். ஐந்து பேர் உள்ள குடும்பத்திற்கு ரூ.545, ஏழு பேர் வரை உள்ள குடும்பத்திற்கு ரூ.600 செலுத்த வேண்டும்.
இந்த மருத்துவ காப்பீடு செய்து கொள்பவர்களுக்கு, மத்திய அரசும் தன் பங்கு காப்பீடு தொகையை செலுத்தும். இதன் கீழ் எல்லாவித நோய்களுக்கும் சிகிச்சை பெறலாம்.
இந்த மருத்துவ காப்பீடு செய்து 70 வயது வரை உள்ளவர்கள் செய்து கொள்ளலாம். இதன் சிறப்பம்சம் என்னவெனில் ஏற்கனவே உள்ள நோய்களுக்கும், இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம்.
அத்துடன் நோய் வாய்ப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது, வேலைக்கு போகாததினால் ஏற்படும் வருவாய் இழப்பு, கணவன், மனைவி இருவருக்கும் கொடுக்கப்படும்.
இந்த மருத்துவ காப்பீடு திட்டம் நாட்டிலேயே முதன் முறையாக நேற்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபூரத்தில், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும் போது, இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைவரும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.சீனிவாசன் கூறுகையில், இந்த திட்டத்தின் படி மருத்துவமனையில் தங்கும் அறை வாடகை உட்பட மற்ற செலவுகளையும் திரும்ப பெறலாம் என்று தெரிவித்தார்.