வாகனங்கள் பயன்படுத்தும் டீசலுக்கு ஒரு விலையும், மற்ற தொழில் துறையினர் பயன்படுத்தும் டீசலுக்கு கூடுதல் விலை விதிப்பது பற்றியும் அரசு பரிசீலித்து வருவதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.
தற்போது பெட்ரோல், டீசல் உற்பத்தி செலவை விட, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6.31, டீசலுக்கு ரூ.13.69 நஷ்டம் ஏற்படுகிறது.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட வாகன போக்குவரத்திற்கு அரசு நிர்ணயிக்கும் விலையும், மற்ற தொழில் துறையினர் ஜெனரேட்டர் இயக்கவும், வேறு பயன்படுக்காக உபயோகிக்கும் டீசலை, சந்தை விலைக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும் படி, பெட்ரோலிய நிறுவனங்கள் கூறி வருகின்றன.
இது குறித்து இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முரளி மனோகர் தியோரா, டீசலுக்கு இரட்டை விலை விதிப்பது, தற்போது பரிசீலனையில் உள்ளது. இது நெருக்கடியான நேரம்.
இந்த வருடம் டீசலை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால், ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்று தெரிவித்தார்.
பல்வேறு மாநிலங்களில் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தொழில் துறையும், வர்த்தக நிறுவனங்களும், தங்களின் தேவைக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஜெனரேட்டர்களையே முழுவதும் நம்பியுள்ளன. குறிப்பாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்ற தடை இல்லாமல் மின்சாரம் (Un-interrupted) தேவைப்படும் நிறுவனங்கள் அதிக அளவு டீசலை பயன்படுத்துகின்றன.
இதனால் டீசலின் தேவையும், விற்பனையும் எதிர்பார்க்காத அளவு அதிகரித்துள்ளது. இதன் விற்பனை அதிகரிப்பதால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு இழப்பும் நாளுக்கு நாள் உயர்கிறது.
இதை கருத்தில் கொண்டு பெட்ரோலிய நிறுவனங்கள் வாகன போக்குவரத்துக்கு அல்லாத மற்ற தொழில், வர்த்தக துறையினர் உபயோகிக்கும் டீசலை சந்தை விலையில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றன.
டீசலுக்கு இரட்டை விலை நிர்ணயிப்பது நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. வீட்டு உபயோகத்திற்காக மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர், அதிக விலைக்கு பல வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அவ்வப்போது அதிகாரிகள் தீடீர் சோதனை நடத்தி சிலிண்டர்களை பறிமுதல் செய்கின்றனர். அவர்களால் முழுமையாக தடுத்து நிறுத்த இயலவில்லை.
இந்நிலையில் டீசலுக்கு இரட்டை விலை நிர்ணயித்து, அதனை எவ்வாறு அரசு அமல்படுத்த போகிறது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.