மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூரில் டாடா மோட்டார் நிறுவனம் அமைத்துவரும் நானோ கார் (nano car) தொழிற்சாலை பிரச்சனையில் மத்திய அரசு தலையிடாது என்று சந்தோஷ் மோகன் தேவ் தெரிவித்தார்.
இந்த தொழிற்சாலைக்காக விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய நிலத்தில் 400 ஏக்கர் திரும்ப வழங்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி (Mamta Banarjee) தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடந்த பத்து நாட்களாக போராடி வருகிறது. இதனால் இந்த தொழிற்சாலையின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று புது டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய கனரக அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த பிரச்சனையில் மத்திய அரசு நேரடியாக தலையிடாது. இது எங்கள் வேலை இல்லை. சம்பந்தப்பட்ட தரப்பினர் மத்திய அரசை அணுகினால் மட்டுமே தலையிடுவோம் என்று கூறினார்.
இந்த பிரச்சனையில் மத்திய அரசு தவிர்க்க பார்க்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அவர்கள் வந்தால், நாங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிப்போம். இதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
சிங்கூர் நில பிரச்சனையை கெளரவ விஷயமாக கருதாமல், மம்தா பானர்ஜியும், ரத்தன் டாடாவும் (Ratan Tata) தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.