Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கச்சா பொருள் வங்கி!

கச்சா பொருள் வங்கி!
, வியாழன், 4 செப்டம்பர் 2008 (11:47 IST)
கோவையில் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கச்சாப் பொருட்களை வழங்க, கச்சாப் பொருள் வங்கி திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தொழில் நகரங்களில் ஒன்றான கோவையில் மோட்டார், வாகன உதிரி பாகங்கள், வார்ப்புப் பொருட்கள், மின் சாதனத்திற்கு தேவையான பொருட்கள் உட்பட பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதை குறு, சிறு தொழிற் கூடங்கள் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்புவதுடன், பெரிய நிறுவனங்களுக்கும், ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் வழங்குகின்றன.

இவை உருக்கு, இரும்பு உட்பட பல்வேறு உலோக பொருட்களை கச்சாப் பொருட்களாக பயன்படுத்துகின்றன.

இதன் விலை மாற்றம், தட்டுப்பாடு ஆகியவைகளால் சிறு, குறுந் தொழில்கள் (small and tiny industries) அடிக்கடி பாதிக்கப்படுகின்றன.

அத்துடன் இந்த தொழில் கூடங்களால் அதிக அளவு முதலீடு செய்து, மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளவும் முடியாது.

இந்த மாதிரியான பிரச்சனைகளால் பாதிக்கப்படாமல், தொடர்ந்து கச்சாப் பொருட்கள் கிடைக்க கோவையில் கச்சா பொருள் வங்கி (Raw Material Bank) திறக்கப்பட்டுள்ளது.

இதை கோவை தொழில் உள்கட்டமைப்பு சங்கம் திறந்துள்ளது. இந்த கச்சா பொருள் வங்கி, சின்னவேடம்பட்டி என்ற இடத்தில் 1 ஏக்கர் நிலத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சதர்ன் இந்தியா இன்ஜினியரிங் அண்ட் மெனுபக்சரஸ் அசோசியேசன் (Southern India Engineering and Manufacturers Association) தலைவர் ஜெ. ராம்தாஸ் கூறுகையில், இந்த கச்சாப் பொருட்கள் வங்கி, எல்லோரும் அணுகும் விதமாக, மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு அருகில் எடை போடும் இயந்திரம் இருப்பது கூடுதல் வசதி.

கச்சா பொருள் வங்கி அதிகாரபூர்வமாக திறக்கப்படவில்லை. ஆனால் கடந்த 20 நாட்களில் 600 டன் தேனிரும்பு, 200 டன்னுக்கும் அதிகமாக உலை கரி விநியோகித்துள்ளோம் என்று கூறினார்.

கோவை தொழில் உள்கட்டமைப்பு சங்க தலைவர் ஜி.கஜேந்திரன் கூறுகையில், எங்களின் நோக்கம் கச்சாப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து நியாயமான விலையில் பெற வேண்டும் என்பதே. வார்ப்ப்பட தொழிற்சாலைகள், பம்பு செட்டுகளை தயாரிக்கும் நிறுவனங்கள், மற்ற பொறியியல் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழில் கூடங்களுக்கு குறைந்த விலையில் தேவையான கச்சாப் பொருட்களை கிடைக்க செய்யவேண்டும். இவைகளுக்கு 3 முதல் 5 விழுக்காடு வரை குறைவான விலையில் கச்சாப் பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்பதே.

இங்கு உருக்கு கம்பிகள், தாமிர கம்பிகள், உலைகரி உட்பட தொழில் கூடங்களுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

அடுத்த கட்டமாக வார்ப்பட தொழிற்சாலைகளுக்காக கழிவு உருக்கு பொருட்கள், வார்ப்பட இரும்பு பொருட்கள் மொத்தமாக வாங்கி விற்பனை செய்யப்படும்.

இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான கச்சாப் பொருட்களை கணக்கிட்டு, மொத்தமாக உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி, குறு,சிறு தொழில் கூடங்களுக்கு விற்பனை செய்கின்றோம் என்று கூறினார்.

இந்த கச்சாப் பொருட்கள் வங்கி ரூ.36 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நடைமுறை மூலதனமாக ரூ.5 கோடி திரட்டப்பட்டுள்ளது. இதை பல்வேறு சங்கங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிதி நிறுவனங்களிடமும் கடன் வாங்கப்பட்டுள்ளது.

இங்கு சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் கச்சா பொருட்கள் வழங்கப்படும். இந்த சங்கத்தில் 500 தொழிற்சாலைகள் நேரடி உறுப்பினர்களாகவும், 2 ஆயிரம் தொழிற் கூடங்கள் மறைமுக உறுப்பினர்களாகவும் உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil