Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிங்கூர் பிரச்சனை - ஆளுநரின் முயற்சி பலிக்குமா?

சிங்கூர் பிரச்சனை - ஆளுநரின் முயற்சி பலிக்குமா?
, திங்கள், 1 செப்டம்பர் 2008 (14:09 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூரில் டாடா மோட்டார் நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர, அம்மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி முயற்சி எடுத்துள்ளார். இவரின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா என்பது போகப் போகதான் தெரியும்.

டாடா நானோ ரக கார் தொழிற்சாலை எதிரே திரிணாமுல் காங்கரஸ் கட்சி நடத்தும் போராட்டம் 9வது நாளை எட்டியுள்ளது.

இன்றுடன் சேர்த்து நான்கு நாட்களாக தொழிற்சாலையில் எந்த வேலையும் நடக்கவில்லை.

மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூரில் டாடா மோட்டார் நிறுவனம் நானோ ரக கார்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான மேற்கு வங்க அரசு கார் தொழிற்சாலை அமைக்க ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது.

இதில் 400 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது. இதை விவசாயிகளுக்கு திருப்பி கொடுக்க வேண்டும். இதற்கு பதிலாக தொழிற்சாலையின் எதிரே உள்ள காலி நிலத்தில் தொழிற்சாலை அமைத்துக் கொள்ளலாம் என்று திரிணாமல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்த பிரச்சனைக்கு முடிவு காண்பதற்காக மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி முயற்சி மேற்கொண்டார். இவர் இது தொடர்பாக சனிக்கிழமை மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதினார்.

அதில் சிங்கூர் நிலப் பிரச்சனையில் தொடர்புடைய எல்லோரும். இதனால் ஏற்பட்டுள்ள சமூக பாதிப்புக்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

நீங்களும், மற்றவர்களும் கைப்பற்றப்பட்ட நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றீர்கள். மாநில அரசும், டாடா நிறுவனமும் தங்களுடைய நிலையில் இருந்து (நிலம் திருப்பி வழங்க முடியாது) பின்வாங்க போவதில்லை என்று கூறுகின்றன.

இரண்டு தரப்பும் தங்களுடைய நிலையில் பிடிவாதமாக இருப்பதால், முதலீடு, அரசியல் ரீதியாக என்பதை தவிர்த்து, சமூகரீதியாக ஏற்பட்டுள்ள பாதிப்பை பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

இதனை தீர்க்க எவ்வித அரசியல் அல்லது தொழில் துறை சாராதவர் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியின் கடிதத்தை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிரிஷ் ஜமி ஜிபான் ஜிபிகா ரக்சா கமிட்டி (விவசாய நில மீட்பு இயக்கம்) உட்பட பிற அமைப்பைச் சேர்ந்த 16 பேர் ஞாயிற்றுக் கிழமை ஆளுநரை சந்தித்தனர்.

இந்நிலையில் இன்று மம்தா பானர்ஜி, தான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார்.

அத்துடன் 400 ஏக்கர் நிலம் திருப்பி வழங்கப்படும் வரை போராட்டமும் தொடரும், பேச்சுவார்த்தையும் தொடரும் என்று கூறினார். இந்த நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பி வழங்கிவிட்டு, அதற்கு பதிலாக தொழிற்சாலை எதிர்புறம் உள்ள 500 ஏக்கர் நிலத்தில், கார் தொழிற்சாலைக்கு தேவையான தொழில் கூடங்களை அமைத்துக் கொள்ளலாம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மம்தா பானர்ஜி கூறுவது போல் 400 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு திரும்ப கொடுப்பது காரிய சாத்தியமற்றது. மாநில அரசு தேவைக்கும் அதிகமாக ஒரு அங்குலம் நிலம் கூட கையகப்படுத்தவில்லை என்று கூறினார்.

மேற்கு வங்க இடதுமுன்னணி தலைவர் பீமன் போஸ் விடுத்துள்ள அறிக்கையில், மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு, அவரின் கோரிக்கையை எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil