ஆசியன் அமைப்பு நாடுகளுடன் ஏற்படும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தால், தென் மாநில விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
ஆசியன் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் ஆசியன் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு தானியங்கள், பணப்பயிர்களுக்கு இறக்குமதி வரி படிப்படியாக குறைக்கப்படும்.
இதனால் தென்மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், குறிப்பாக கேரள மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கேரள மாநில அரசு கவலை தெரிவித்து இருந்தது.
இதற்கு பதிலளித்த கமல்நாத், அவர்களுக்கு இந்த ஒப்பந்தம் குறித்து தெரியவில்லை. தேங்காய் (கொப்பரை), நறுமணப் பொருட்கள், கோதுமை, மக்காச் சோளம், அரிசி, பதப்படுத்தப்பட்ட உணவு, ரப்பர் ஆகியவை உட்பட 288 பொருட்கள் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை.
இந்தியா ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கு இறக்குமதி வரியை நீக்கியுள்ளது. இதே போல் சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதி வரியை 7.5 விழுக்காடாக குறைத்துள்ளது.
ஆசியன் அமைப்பில் உள்ள கிழக்காசிய நாடுகளுடன், இந்தியாவின் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. இவை இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக உள்ளன. சென்ற வருடம் (2007-08) இந்தியாவிற்கும், இந்த நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 3800 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது அடுத்த இரண்டு வருடங்களில் 5000 கோடி டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியன் அமைப்புடன் ஏற்கனவே சீனா, ஜப்பான் ஆகிய இருநாடுகளும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இதனால் ஏற்படும் பயன்களை அனுபவித்து வருகின்றன. கிழக்காசியாவில் பெரிய நாடாக உள்ள இந்தியா, ஆசியன் நாடுகளின் சந்தையை தவறவிட முடியாது என்று கமல்நாத் கூறினார்.
இதே போல் மிக முக்கியமான பொருட்களின் பட்டியலில் சுத்திகரிக்கப்படாத பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், தேயிலை, மிளகு, காபி ஆகியவை உள்ளன. (மிக முக்கியமான பட்டியலில் உள்ள பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கலாம். இதன் மீது கூடுதலாக இறக்குமதி வரி விதிக்கலாம்).
2018 ஆம் ஆண்டில் தான் தற்போது உள்ள அளவில் இருந்து மிளகு இறக்குமதி வரி 50 விழுக்காடு குறைக்கப்படும். இதே போல் தேயிலை, காபி இறக்குமதி வரி 45 விழுக்காடு குறைக்கப்படும் என்று வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்தார்.
ஆசியன் அமைப்பில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, புருனே, கம்போடியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய பத்து நாடுகள் உறுப்பினராக உள்ளன.