ரிசர்வ் வங்கி 1996 ஆம் ஆண்டு வெளியிட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை படிப்படியாக புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
மும்பையில் இருந்து ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் அல்பனா கில்லவாலா செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 1996 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ள பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவை வங்கிகளில் செலுத்தும் போது, மீண்டும் புழக்கத்திற்கு அனுப்பட மாட்டாது.
இந்த ரூபாய் நோட்டுக்கு பதிலாக 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி உருவம் பதித்த ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படும். இதில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
முதலில் பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நிறுத்தப்படும். பிறகு படிப்படியாக மற்ற ரூபாய் நோட்டுக்களும் நிறுத்தப்படும் என்று கூறினார்.
இதற்கு பொருள், இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அர்த்தமல்ல. இவை எப்போதும் போல் செல்லும். வங்கிகளில் செலுத்தும் போது, மறு சுழற்சிக்கு மீண்டும் கொடுக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.
இந்த ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து நிறுத்துவதற்கு காரணம், இதே மாதிரி கள்ள நோட்டு அடிக்கப்படுவதா என்று கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில், எல்லா நாடுகளிலும் பழைய ரூபாய்களுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கிகள் வெளியிடுவது சாதாரண நடைமுறையே என்று கூறினார்.