கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறியாளர்கள் சங்கத்துடன் தமிழக அரசு வரும் 28ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதனிடையே இன்று 11வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நூறு விழுக்காடு கூலி உயர்வு கேட்டு கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்காததால் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
கூலி தொடர்பாக ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி சங்கங்களுக்கிடையே அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி முன்னிலையில் 2 முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் கோரிக்கைக்கு, சொந்த விசைத்தறியாளர்களும் ஆதரவு தெரிவித்து கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக விசைத்தறிகளுக்கு நூல் சப்ளை செய்யும் நூற்பாலைகளும் பாதிக்கப்பட்டன.
கோடிக்கணக்கான மதிப்புள்ள நூல்கள் தேங்கியதால், உடுமலை, பல்லடம், திருப்பூர், அவிநாசி மற்றும் வெள்ளக்கோவிலில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நூற்பாலைகளும் நேற்று முதல் உற்பத்தியை நிறுத்தி உள்ளன. இதனால் கோவை மாவட்டத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வர வரும் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவை ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு நடக்கிறது. இதில் கைத்தறித்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசு, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.