கூலி உயர்வு கோரி கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் 10வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நூறு விழுக்காடு கூலி உயர்வு கேட்டு கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கவில்லை. 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
தொடர் வேலைநிறுத்தத்தால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கூலி தொடர்பாக ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி சங்கங்களுக்கிடையே அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
20 விழுக்காடு துணிகள் தேக்கமாகி இருப்பதால், கூலி உயர்வுக்கு இப்போது வாய்ப்பில்லை என ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தேதி குறிப்பிடாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
விசைத்தறியாளர் போராட்டத்துக்கு ஆதரவாக வரும் 31ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக சொந்த விசைத்தறியாளர்கள் அறிவித்துள்ளனர்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது என முடிவு செய்யப்படாததாலும், கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் தயக்கம் காட்டுவதாலும் இழுபறி நீடிக்கிறது.
இன்று 10வது நாளாக விசைத்தறி வேலைநிறுத்தம் நடக்கிறது. இதன் சார்பு தொழில்களான சைசிங், ஸ்பின்னிங் மில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விசைத்தறிகளுக்கு நூல் வழங்கும் ஓபன் எண்ட் மில்களும் நேற்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கோவை மாவட்டத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி ஸ்தம்பித்துள்ளது.