Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏற்றுமதியாளர்களுக்கு வட்டிச் சலுகை ரத்து!

ஏற்றுமதியாளர்களுக்கு வட்டிச் சலுகை ரத்து!
, வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (13:31 IST)
ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் 4 விழுக்காடு வட்டி சலுகை நீடிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்தது. இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு சலுகை வழங்கியது. இதன்படி ஏற்றுமதியாளர்களுக்கு 4 விழுக்காடு வட்டி சலுகை வழங்கப்பட்டது.

இந்திய ஜவுளி உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் செவ்வாய் கிழமை நிதி அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்தனர்.

அப்போது அவர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகை நீடிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அப்போது அவர்களிடம் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இப்போது அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அளித்து வரும் வட்டிச் சலுகை அடுத்த மாதத்திற்குப் (செப்டம்பர்-30) பிறகு நீடிக்கப்படாது ஏற்றுமதியாளர்களிடம் கூறியதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதே போல் ஏற்றுமதியாளர்கள், நிதி அமைச்சரிடம் மாநில அரசுகள் விதிக்கும் சந்தை வரி, நுழைவு வரி (ஆக்ட்ராய்) ஆகியவைகளை மத்திய அரசு திரும்ப கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர். இதில் அரசியல் சாசன பிரச்சனை இருப்பதாக கூறி, அந்தக் கோரிக்கையையும் நிராகரித்ததாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதே போல் மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப கொடுக்கும் பல வரிகளின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் கேட்டதையும் நிதி அமைச்சர் சிதம்பரம் நிராகரித்தார் என்று பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பருத்தி, இயந்திரங்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் உலக சந்தையில் வியட்நாம், வங்காளதேஷத்தின் கடுமையான போட்டிகளை சந்திக்க வேண்டியதுள்ளது. இதனால் மத்திய அரசு சலுகைகளை நீடிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Indian Export Organizations -FIEO) தலைவர் கணேஷ் குப்தா கூறுகையில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், உற்பத்தி பொருட்களின் பங்கு குறைந்து வருகிறது. 2006-07ஆம் ஆண்டு மொத்த ஏற்றுமதியில், உற்பத்தி பொருட்களின் பங்கு 67 விழுக்காடாக இருந்தது, இது சென்ற வருடம் 64% ஆக குறைந்து விட்டது. இதை அதிகரிக்க மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகளை நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil