புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சிறு தொழில்கள் மூடுவதில் இருந்து காக்க, மின்தடையை உடனே நீக்க வேண்டும் என்று சிறு தொழில்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மின் பற்றாக்குறையால், புதுச்சேரி மாநிலத்தில் மின் விநியாகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புதுச்சேரி தொழில் சங்கம் கூறியுள்ளது.
இதன் தலைவர் கனகசபாபதி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், மின் தடையால் 50 சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வாரத்திற்கு 52 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இதனால் மேட்டுப்பாளையம், சைதராபேட் ஆகிய தொழிற்பேட்டைகளில் உள்ள சிறு, குறுந் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
எங்கள் சங்க பிரநிதிகள் துணை நிலை ஆளுநர், முதல் அமைச்சர், மத்திய மின்துறை அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து மின் தடை நீக்கும் படி கேட்டுக் கொண்டோம். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதே நிலை அடுத்த இரண்டு மாதத்திற்கு நீடித்தால், இந்த இரண்டு தொழிற்பேட்டைகளிலும் உள்ள தொழிற்சாலைகள் மூட வேண்டிய நிலை ஏற்படும்.
புதுவை மாநிலத்தின் மின் தேவையை நிறைவு செய்ய, மத்திய தொகுப்பில் இருந்து அதிக அளவு பெற வேண்டும். இதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட வேண்டும் என்று கூறினார்.