இந்த நிதி ஆண்டின் (2008-09) தொடகத்தில் இருந்தே பணவீக்கம் அதிகரிப்பு, தொழில் துறை உற்பத்தி சரிவு, உணவு உட்பட பல்வேறு பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார வளர்ச்சி மந்தம், வட்டி விகிதம் அதிகரிப்பு என்று வரிசையாக எதிர் மறையான சம்பவங்களே நடைபெற்றுள்ளன.
இதை எல்லாம் கடந்து இந்த நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 10.073 பில்லியன் டாலர் (1 பில்லியன் 100 கோடி) அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது என்ற தகவல் ஆறுதலான செய்தியாக கிடைத்துள்ளது.
இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜீன் வரை முதல் மூன்று மாதங்களில் அந்நிய நேரடி முதலீடு 10.073 பில்லியன் டாலர் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
(2005-06 நிதி ஆண்டில் 12 மாதங்களில் 8.961 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்தது).
அதே நேரத்தில் அந்நிய நேரடி முதலீடு பெறுவதில் இந்தியாவுக்கு போட்டியாக உள்ள சீனாவும், ஏப்ரல் முதல் ஜீன் வரையிலான மூன்று மாதங்களில் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அந்நிய நேரடி முதலீடு பெற்றுள்ளது.
இந்நியாவில் 2005-06 ஆம் ஆண்டு வரை அந்நிய நேரடி முதலீடு வருவது 10 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்தது. அதற்கு பிறகு தான் இந்த வகை முதலீடு அதிக அளவு வர ஆரம்பித்தன. 2006-07 இல் 22 பில்லியன் டாலர், 2007-08 இல் 32 பில்லியன் டாலர் வந்தன.
ஆனால் கடந்த பத்தாண்டுகளில் சீனா சராசரியாக 50 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அந்நிய முதலீடு பெற்று வருகிறது.
இந்தியா அந்நிய நேரடி முதலீடு பெறுவதில் இப்போதுள்ள நிலையே நீடித்தால், இது இந்த நிதி ஆண்டில் 40 பில்லியன் டாலரை தாண்டிவிடும் என்று கருதப்படுகிறது.
கடந்த நிதி ஆண்டில் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும் போது. இந்த நிதி ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு இரண்டு மடங்கு வந்துள்ளது. (சென்ற வருடம் ஏப்ரல் முதல் ஜீன் வரை 5 பில்லியன் டாலர்). இந்த வருடம் 10.073 பில்லியன் டாலர்.
இதில் அந்நிய நிறுவனங்கள் 2.253 பில்லியன் டாலர் மதிப்பிற்கு, இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கியதும் அடங்கும்.