பாரத ஸ்டேட் வங்கியுடன், ஸ்டேட் பாங்க் ஆப் செளராஷ்டிரா இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
பாரத ஸ்டேட் வங்கியுடன், இதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் செளராஷ்டிரா உட்பட 8 வங்கிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை சென்ற வாரம் ஸ்டேட் பாங்க் ஆப் செளராஷ்டிராவை இணைப்பதற்கான ஒப்புதல் அளித்தது.
இந்த இணைப்பிற்கு, ஸ்டேட் வங்கிகளில் வேலை பார்க்கும் அதிகாரிகள், ஊழியர்கள் ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வங்கிகளில் வேலைபார்க்கும் 80 ஆயிரத்திற்கும் அதிகமான அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர், இதனால் இதன் 15 ஆயிரம் கிளைகளில் வங்கி பணிகள் பாதிக்கப்படும்.
பாரத ஸ்டேட் வங்கியுடன், ஸ்டேட் பாங்க் ஆப் செளராஷ்டிராவை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இணைப்பு பணி, மத்திய அரசின் அதிகாரபூர்வ அரசிதழில் (கெஜட்) வெளியிட்ட பின்பே நடைமுறைக்கு வரும்.
இந்நிலையில் சென்ற வாரம் மும்பை பங்குச் சந்தையிடம், பாரத ஸ்டேட் வங்கி, இதனுடன் ஸ்டேட் பாங்க் ஆப் செளராஷ்டிராவை இணைக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதிலிருந்து இந்த இணைப்பு முடிவில் இருந்து மத்திய அரசு பின்வாங்காது என்று தெரிகிறது. அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து கொடுத்து வந்த ஆதரவை இடது சாரி கட்சிகள் விலக்கி கொண்டன. இது வரை மத்திய அரசு நிதி, வங்கி துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள இடது சாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இவை ஆதரவை விலக்கிக் கொண்டதால் அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. எனவே இனி நிதி, வங்கி துறையில் சீர்திருத்தங்களை மத்திய அரசு முழு அளவில் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கம் இணைந்து நாளை மறுநாள் (20 ஆம் தேதி) ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளன.