உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை முடிவுக்கு கொண்டுவர, இதில் பங்கேற்றுள்ள நாடுகள் ஒத்துழைக்கும் என்று பாஸ்கல் லாமி நம்பிக்கை தெரிவித்தார்.
உலக வர்த்தக அமைப்பில் விவசாய விளைபொருட்களின் வர்த்தகம் தொடர்பாக தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் பங்கேற்றுள்ள நாடுகளிடையே பல சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்குவதற்காக, சென்ற மாதம் ஜெனிவாவில் வர்த்தக அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கும், அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனால் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் உலக வர்த்தக அமைப்பின் தலைமைச் செயலாளர் பாஸ்கல் லாமி, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் நேற்று இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பல இந்திய தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
உலக வர்த்தக அமைப்பு தலைமை செயலாளர் பாஸ்கல் லாமி பேசும் போது, இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் நாடுகள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொண்டால், உடன்பாடு எட்டுவதற்கு உதவிசெய்ய தயாராக இருக்கிறேன்.
இந்தியா விவசாய விளைபொருட்கள் பற்றிய பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு குறித்த அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. அமெரிக்காவும் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தது என்று லாமி கூறினார்.
இந்தியா அந்நிய நாடுகளில் இருந்து விவசாய விளைபொருட்களின் இறக்குமதி 10 விழுக்காட்டு என்ற அளவை எட்டினால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வேண்டும் என்று கேட்டது. அமெரிக்கா 40 விழுக்காடு என்ற அளவிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இதில் மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் பேசும் போது, ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு காரணம் அமெரிக்காதான். இந்தியா விட்டுக் கொடுத்தும் கூட, அமெரிக்காவின் பிடிவாதமான நிலைதான் பேச்சுவார்த்தை முறிவதற்கு காரணம் என்று விளக்கினார்.
ஜெனிவா பேச்சுவார்த்தை அட்டவணையில் 18 அம்சமாக இடம் பெற்ற வளரும் நாடுகளுக்கு விவசாய விளை பொருட்கள் வர்த்தக பாதுகாப்பு பிரிவில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனால் 19,20 வது அம்சமாக இடம் பெற்று இருந்த ஜவுளி வர்த்தகம், அறிவுசார் சொத்துரிமை, பொருட்கள் தயாரிப்பு குறித்த இடம் போன்றவைகளில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியா தனக்காக மட்டும் பேசவில்லை. மிக குறைவாக வளர்ச்சி அடைந்துள்ள ஏழை நாடுகளின் சார்பிலும், வளர்ந்து வரும் நாடுகளின் சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியது. 30க்கும் மேற்பட்ட நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றது என்று கூறினார்.