பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு மாதமும் அதிகரிக்க பி.கே. சதுர்வேதி குழு பரிந்துரைத்துள்ளது.
உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணை விலை அதிகரிக்கும் போது. பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்களால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்த முடிவதில்லை.
இதற்கு காரணம் இவற்றின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது.
பெட்ரோலிய நிறுவனங்கள் உற்பத்தி செலவை விட, குறைந்த விலையில் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்ய வேண்டியதுள்ளது. இதனால் இவைகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
மத்திய அரசு முன்னாள் அமைச்சரவை செயலாளரும், திட்டக் குழு உறுப்பினரான பி.கே. சதுர்வேதி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இதனிடம் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கான ஆலோசனையை கூறுமாறு கேட்டுக் கொண்டது.
சதுர்வேதி தலைமையிலான குழு அரசிடம் தனது அறிக்கையை அளித்துள்ளதாக தெரிகிறது.
அதில் டீசல், பெட்ரோலுக்கான விலையை மாதா மாதம் குறிப்பிட்ட அளவு உயர்த்தலாம். தொழிற் சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் டீசலுக்கு அரசு மானியம் கொடுக்கவேண்டியதில்லை. இவைகளுக்கு அவ்வப்போது சந்தை நிலவர விலையில் டீசல் விற்பனை செய்யலாம்.
இதே போல் காரியம் குறைவாக உள்ள பி.எஸ் II ரக (காரியம் அளவு) பெட்ரோலின் விலையை 2009 மார்ச் மாதம் வரை, ஒவ்வொரு மாதமும் லிட்டருக்கு ரூ.2.50 உயர்த்தலாம். பி.எஸ் III ரக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தலாம்.
2010 ஆம் ஆண்டு வரை டீசல் விலையை ஒவ்வொரு மாதமும் லிட்டருக்கு 75 பைசா அதிகரிக்கலாம்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டும் மானிய விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்யவேண்டும். மற்றவர்களுக்கு சமையல் எரிவாயுக்கு வழங்கப்படும் மானியத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் (ஒவ்வொரு மாதமும் விலை உயர்வு).
1999ஆம் ஆண்டுக்கு முன்பு பெட்ரோலிய கச்சா எண்ணெய் துரப்பனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோலிய கிணறுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விற்பனை மூலம அதிக அளவு இலாபம் கிடைக்கிறது. இவ்வாறு 1999ஆம் ஆண்டுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனங்களின் இலாபம் மீது இலாப வரி விதிக்கலாம் என்று சதுர்வேதி தலைமையிலான குழு பிரதமரிடம் சமர்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.