உலக வர்த்தக அமைப்பு தலைமை இயக்குநர் பாஸ்கல் லாமி நாளை இந்தியா வருகிறார்.
ஜெனிவாவில் கடந்த மாதம் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் ரீதியான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் பாஸ்கல் லாமி இந்தியாவுக்கு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவர் இந்தியாவில் 12, 13ஆம் தேதிகளில் தங்கி இருப்பார்.
அப்போது மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் மற்றும் தொழில் வர்த்தக பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவார்.
ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ,தென் ஆப்பிரிக்கா உட்பட வளரும் நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் விவசாய துறைக்கு வழங்கும் மானியத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இதற்கு அமெரிக்கா உட்பட வளர்ச்சி அடைந்த நாடுகள் ஒத்துக் கொள்ளவில்லை. இதுதான் ஜெனிவாவில் நடந்த வர்த்தக அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம்.
உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்று இருந்தார். அங்கு ஜெனிவா பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக வர்த்தக அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஜெனிவா பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் ஆலோசனையை இந்தியாவும், சீனாவும் நிராகரித்ததே.
வளரும் நாடுகள், ஏழை நாடுகளின் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் இந்தியாவின் ஆலோசனையை சீனாவும், 100க்கும் மேற்பட்ட வளரும் நாடுகளும் ஆதரிப்பதாக அறிவித்தது.
ஜெனிவா பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாஸ்கல் லாமி மத்திய வர்த்தக அமைச்சருடனும், மற்ற உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
இத்துடன் சி.யூ.டி.எஸ். இன்டர்நேஷனல் என்ற ஆய்வு நிறுவனமும், இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பும் (ஃபிக்கி) இணைந்து நடத்தும் "வளர்ச்சிக்கான உலகாளவிய ஒத்துழைப்பு" என்ற இரண்டு நாள் கருத்தரங்கிலும் பங்கேற்பார்.