தேசிய பல்பொருள் முன்பேர சந்தையின் பங்குகளை வாங்குவதில்லை என்று மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) முடிவு செய்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை முன்பு அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய பல்பொருள் முன்பேர சந்தையின் (நேஷனல் மல்டி கமோடிட்டி எக்ஸ்சேஞ்ச்) 26 விழுக்காடு பங்குகளை வாங்க திட்டமிட்டு இருந்தது. இதற்காக ரூ.100 கோடி முதலீடு செய்யவும் தீர்மானித்தது.
ஆனால் நேற்று மும்பை பங்குச் சந்தையின் இயக்குநர் குழு, இந்த முன்பேர சந்தையின் பங்குளை வாங்குவதில்லை என்று இறுதியாக தீர்மானித்தது.
இந்த முடிவு பல்வேறு காரணங்களினால் எடுக்கப்பட்டதாக பங்குச் சந்தை அறிவித்துள்ளது.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பே, முன்பேர சந்தையின் பங்குகளை வாங்குவதற்கு தேவையான சட்டபூர்வ மற்றும் அனுமதி வாங்குவது தொடர்பான நடைமுறைகள் முடிந்து விட்டன.
இந்த முன்பேர சந்தையின் பங்குகளை வாங்கும் திட்டத்திற்கு முன்னோடியாக இருந்த செயல்பட்ட பங்குச் சந்தையின் மேலாண்மை இயக்குநர் ரஜினிகாந்த் படேல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தது நினைவிருக்கலாம்.
மும்பை பங்குச் சந்தையின் முடிவு பற்றி, தேசிய பல்பொருள் முன்பேர சந்தையின் மேலாண்மை இயக்குநர் கைலாஷ் குப்தா கருத்து தெரிவிக்கையில், அவர்களுக்கு சில பிரச்சனை இருப்பதாக தெரிகிறது. அவர்கள் எங்கள் நிறுவன பங்குகளை வாங்காவிட்டால், அது பற்றி நாங்கள் கவலைபட போவதில்லை என்று கூறினார்.
ரிலையன்ஸ் மணி இரண்டு வாரங்களுக்கு முன்பு, முன்பேர சந்தையின் 26 விழுக்காடு பங்குகளை வாங்க இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கான அனுமதியை முன்பேர சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் பெறுவதற்கு விண்ணப்பித்து இருப்பதாக கைலாஷ் குப்தை தெரிவித்தார்.