கொச்சி துறைமுகத்தில் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் கப்பலில் சரக்கு பெட்டகங்களை ஏற்றும் பணி மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொச்சி துறைமுகத்தில் டிரைலர் லாரி ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் திடீர் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். துறைமுகத்தில் உள்ள ராஜூவ் காந்தி சரக்கு பெட்டக மையத்திற்குள் லாரிகளை கொண்டு செல்வதற்கு மூன்று மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியதுள்ளது என்று கூறி வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
இதனால் ஏற்றுமதி செய்வதற்காக கப்பலில் ஏற்ற வேண்டிய நூற்றுக் கணக்கான சரக்கு பெட்டகங்களை துறைமுகத்திற்குள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சரக்கு பெட்டக மையத்தை நிர்வகித்து வரும் இந்தியா கேட்வே டெர்மினல் நிறுவனமும், கொச்சின் துறைமுக நிர்வாகமும் நேற்று லாரி ஓட்டுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சு வார்த்தையில் எவ்வித முடிவும் ஏற்படவில்லை.
இதனால் லாரி ஓட்டுர்கள் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறும் வரை மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவதில்லை என்று துறைமுக நிர்வாகம் அறிவித்தது.
இது குறித்து துறைமுக செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த தீடீர் வேலை நிறுத்தம் தேவையில்லாதது. இதனால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவடன், துறைமுகத்திற்கும் கெட்ட பெயர் உண்டாகிறது. நாங்கள் முன்பு மற்ற துறைமுகங்களில் கையாண்டு வந்த ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தை, கொச்சி துறைமுகத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளோம். தற்போதைய வேலை நிறுத்தினால் கொச்சி துறைமுகத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
கொச்சி துறைமுகத்தில் சரக்குகளை கையாண்டு வெளியே அனுப்பும் சுங்கத்துறை முகவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், முந்திரி உட்பட பல்வேறு சரக்குகளை ஏற்றிய 250 சரக்கு பெட்டகங்கள் துறைமுகத்திற்குள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் நீடித்தால் ஏற்றுமதியாளர்கள் மற்ற துறைமுகங்களுக்கு சரக்குகளை அனுப்பும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.