இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் முதலீடு செய்வதில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வம் காண்பிக்கின்றன.
இந்நிலையில் ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு அனுமதியை அதிகரித்தால் 25 பில்லியன் டாலர் முதலீடு குவியும் என்று அசோசம் (இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் மத்திய அமைப்பு) கூறியுள்ளது.
தற்போது ரியல் எஸ்டேட் துறையில் நான்கு பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த துறையின் அந்நிய நேரடி முதலீட்டிற்கான அனுமதியை அதிகரித்தால் அடுத்த பத்து வருடங்களில் அந்நிய முதலீடு 25 பில்லியன் டாலராக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதில் முதலீடு செய்தால் வருங்காலத்தில் அதிக அளவு இலாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இப்போது வீட்டு கடன் போன்ற ரியல் எஸ்டேட் துறை கடனுக்கான வட்டி அதிக அளவு உள்ளது. இது வருங்காலத்தில் குறைய வாய்ப்புள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை சராசரியாக வருடத்திற்கு 10 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. இதில் எதிர்காலத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது. இதனால் அந்நிய முதலீடு அதிகளவு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
தற்போதைய மதிப்பீட்டின் படி இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தை 15 பில்லியன் டாலர். இதில் அந்நிய நேரடி முதலீடு நான்கு பில்லியன் டாலராக உள்ளது.
இப்போதுள்ள விதிமுறைகளின் கீழ் அந்நிய நிறுவனங்கள் குறைந்தபட்சம் 50 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கட்டுமான பணிகளையே மேற் கொள்ள முடியும்.
இந்த அளவு வரம்பை நீக்குவதுடன், ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய முதலீடு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு பிரிவினர் அரசை வற்புறுத்தி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பதற்கு தடையாக உள்ள மற்ற அம்சங்களாக உள்ளவை டவுன் சிப் போன்றவைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் அனுமதி பெறவேண்டியதுள்ளது. இதை நீக்கினால் மட்டுமே ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவு அந்நிய நேரடி முதலீடு பெறமுடியும்.
ஆசியாவில் மற்ற நாடுகளில் ரியல் எஸ்டேட், குடியிருப்புகள் கட்டுமானங்களில் முதலீடு செய்தால் 15 முதல் 18 விழுக்காடு வரை இலாபம் கிடைக்கிறது. இந்தியாவில் 20 முதல் 25 விழுக்காடு வரை இலாபம் கிடைக்கிறது. இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் செலுத்துகின்றனர்.
தகவல் தொழில் நுட்ப துறை அலுவலகங்களை அமைக்க எதிர்காலத்தில் 200 மில்லியன் சதுர அடி பரப்பளவில் தேவைப்படும். இத்துடன் 20 மில்லியன் குடியிருப்புகள் தேவைப்படும். இதில் 7 மில்லியன் நகர்ப்புறங்களில் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இனி வருங்காலத்தில் குடியிருப்பு கட்டுமான பணிகள் நகரங்களில் மட்டும் இல்லாமல், சிறிய நகரங்களிலும் நடைபெறும். இதனால் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி 35 விழுக்காடாக உயரும் என்ற அசோசெம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.