அரிசி உட்பட உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு விதித்துள்ள தடையை நீக்க அரசு அவசரப்பட்டு முடிவு எடுக்காது என்று மத்திய வர்த்தக துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்தார்.
புது டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜி.கே.பிள்ளை பேசும் போது, தற்போது அரிசி, சிறு தானியம் போன்றவைகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நவம்பர் மாதம் வரை நீடிக்கும். தற்போது சாகுபடி செய்யப்பட்டு நெல் பயிர் அறுவடை முடிந்து புதிய தானியம் வந்த பிறகே, தடையை விலக்கி கொள்வது பற்றி ஆலோசிக்கப்படும். ரப்பர், சோயா எண்ணெய், கொண்டை கடலை, உருளை கிழங்கு ஆகியவைகளுக்கு முன்பேர வர்த்தகத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க அரசு விரும்பவிலலை என்று தெரிவித்தார்.
இந்த பொருட்களின் மீதான முன்பேர வர்த்தகத்திற்கு, மத்திய அரசு கடந்த மே மாதம் 8 ஆம் தேதி தடை விதித்தது. இந்த தடை நான்கு மாதத்திற்கு அமலில் இருக்கும் என்று அறிவித்தது.
இந்நிலையில் இன்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நெல் உட்பட உணவு தானியங்களின் உற்பத்தி, இருப்பு, வெளிச் சந்தை விலை, பொது விநியோகத்திற்காக உள்ள உணவு தானியம் ஆகியவை பற்றி பரிசீலிக்கிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த பாசுமதி அல்லாத அரிசி, கோதுமை, மக்காச் சோளம், சிறு தானியங்கள் ஆகியவற்றின் விலை உயர்வை தடுக்கவும், உள்நாட்டில் பற்றாக்குறை இல்லாமல் தாராளமாக கிடைக்க ஏற்றுமதி செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.