ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிப்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
உள்நாட்டில் உணவு தானியங்களின் விலை உயர்வைத் தடுக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு அரிசி, சிறு தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது.
இந்த கரீப் பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்துள்ளது. இதனால் நெல் உற்பத்தி அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
இது குறித்து மத்திய வர்த்தக அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், அரிசி ஏற்றுமதிக்கான தடை முழுவதும் நீக்கப்படாது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு மட்டும் நவம்பர் மாதத்திற்கு பிறகு 20 முதல் 30 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது.
நவம்பர் மாதத்தில் 94 லட்சம் டன் நெல் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவு உற்பத்தி இருந்தால், உள்நாட்டு தேவை போக அறுபது லட்சம் டன் உபரியாக இருக்கும்.
கரீப் பருவத்தில் ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி 23.13 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் 11 விழுக்காடு அதிகம் (சென்ற வருடம் 20.76 மில்லியன் ஹெக்டேர்) என்று கூறினார்.
இந்நிலையில் அரிசி ஏற்றுமதியாளர்கள் அரிசி ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இது குறித்து அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் விஜய் சீத்தியா கூறும் போது, பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசி ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். இதற்கு ஒட்டு மொத்தமாக தடை விதிப்பதை விட, மத்திய அரசு உள்நாட்டு உபயோகத்திற்கு தேவையான அளவை விட, உபரியாக இருப்பதை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கலாம். இதன் அதிகபட்ச ஏற்றுமதி அளவை நிர்ணயிக்கலாம்.
மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிப்பதற்கு பதிலாக, ஏற்றுமதியை ஒழுங்குபடுத்தலாம் என்று கூறினார்.