பணவீக்கம் 11.98 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
மத்திய அரசு நேற்று மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் ஜூலை 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.98 விழுக்காடாக இருப்பதாக அறிவித்தது.
இதற்கு காரணம் சில உணவுப் பொருட்கள், உற்பத்தி பொருட்களின் விலை உயர்ந்ததே.
சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 4.65 விழுக்காடாக இருந்தது.
இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 11.89 விழுக்காடாக இருந்தது. சென்ற ஜூன் 5 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதற்கு பிறகு, பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், பணப் புழக்கத்தை குறைக்கவும் கடந்த செவ்வாய் கிழமை வட்டி விகிதம், வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்தியது.
இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது அடுத்து வரும் வாரங்களில்தான் தெரியவரும். அப்போது ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.ரெட்டி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணவீக்கத்தை 7 விழுக்காடாக குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவித்தார்.