Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பி.எஃப். நிதி: இடது சாரிகள் குற்றச்சாட்டு- அரசு மறுப்பு

பி.எஃப். நிதி: இடது சாரிகள் குற்றச்சாட்டு- அரசு மறுப்பு
, வியாழன், 31 ஜூலை 2008 (14:42 IST)
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை நிர்வகிக்க அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்திற்கு சலுகை காட்டியதாக இடது சாரிகள் சுமத்திய குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.

பிராவிடன்ட் ஃபண்ட் என்று அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள கோடிக்காண ரூபாயை, தற்போது பாரத ஸ்டேட் வங்கி மட்டும் நிர்வகித்து வருகிறது.

இந்த நிதியை நிர்வகிக்க தனியார் நிறுவங்களையும் அனுமதிப்பது என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளை (டிரஸ்டி) கூட்டத்தில் நேற்று முன்தினம் முடிவெடுக்கப்பட்டது.

இந்த புரவலர்கள் குழுவில் மத்திய அரசு அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதன் படி ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்சியல், ஹெச்.எஸ்.பி.சி. வங்கி, அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கேப்பிடல் ஆகிய நிறுவனங்களும் பி.எஃப். பணத்தை நிர்வகிக்க அனுமதி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டது. அதில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் ரூ.2 இலட்சத்து 40 ஆயிரம் கோடி உள்ளது. இதில் வருடத்திற்கு ரூ.30,000 கோடி சேர்கிறது.

இந்த நிறுவனங்கள் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பினால் சேர்த்த பணத்தை பயன்படுத்தி இலாபம் அடையும் போது, அதில் இருந்து கிடைக்கும் இலாபம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் இந்த நிதியை ஊக வணிகத்தில் பயன்படுத்துவதால் தொழிலாளர்களுக்கு இழப்பு ஏற்படும். இதனால் தொழிலாளர்கள் அவர்களின் பணி ஓய்வு காலத்திற்கு பிறகு, குறைந்த பட்ச வருவாய் கிடைக்க வேண்டும் என்று பல வருடங்கள் போராடி பெற்ற பலன் வீணாக போய்விடும் என்று கூறியிருந்தது.

இந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்னான்டஸ் பதிலளிக்கையில், பி.எஃப். நிதியை நிர்வகிக்கும் பொறுப்பில் தனியார் நிறுவனங்களையும் அனுமதிப்பது என்ற முடிவு நீண்ட காலத்திற்கு முன் எடுக்கப்பட்டது. இது பற்றி நான் அமைச்சராக வருவதற்கு முன்பே விவாதிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றிய பரிசீலனை கடைசியாக நடந்த கூட்டத்திலும் வந்தது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது பற்றி முடிவு எடுக்க கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தில் தனியார் நிறுவனங்களையும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்க அனுமதி அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது என்று
ஆஸ்கர் ஃபெர்னான்டஸ் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil