நியாய விலைக்கடைகளில் பாமாயில், கோதுமை மாவு விற்பனையை மேலும் ஓராண்டு நீட்டித்து முதலமைச்சர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழக அரசின் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா மற்றும் செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியவைகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் 2007 முதல் நியாய விலைக்கடைகளின் மூலமாக தமிழக அரசு வழங்கி வருகிறது.
இத்திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து கிடைத்து வரும் பெரும் வரவேற்பினையும், அயல்சந்தை விலையையும் கருத்தில் கொண்டு இத்திட்டத்தினை மேலும் ஓராண்டிற்கு ஜூலை 2009 வரை நீட்டித்து செயல்படுத்திட முதலமைச்சர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.