தங்கள் நாட்டு விவசாயிகளின் நலன்களை சமரசம் செய்யும் எந்த உடன்படிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியாவும் சீனாவும் எடுத்த நிலைப்பாட்டை அடுத்து ஜெனிவாவில் கடந்த 9 நாட்களாக நடந்த வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஜெனிவாவில் உலக வர்த்தக மையத்தில் வளர்ந்த, வளர்ந்துவரும் நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான இந்த பேச்சுவார்த்தையில், தங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு அளித்துவரும் மானியத்தை குறைப்பது தொடர்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விட்டுத் தராததும், அதே நேரத்தில் வளர்ந்த நாடுகளின் விவசாய விளைபொருட்களுக்கு தங்கள் நாட்டின் சந்தைகளைத் திறந்துவிடுவது தங்கள் நாட்டின் விவசாயிகளின் வாழ்வைப் பாதிக்கும் என்று கூறி இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகள் தங்கள் நிலையை விட்டுக்கொடுக்க முன்வராததும் பேச்சுவார்த்தை தோல்விக்கு காரணமானது.
ஜெனிவா பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டதாக உலக வர்த்தக அமைப்பின் தலைமைப் பொதுச் செயலாளர் பாஸ்கல் லாமி அறிவித்தார்.
“சுற்றிவளைத்து பேசுவதற்கு ஏதுமில்லை, இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டது. (வளர்ந்த, வளரும் நாடுகள்) தங்களுக்கிடையிலான வேறுபாடுகளை சமன்படுத்தித் தீர்த்துக்கொள்ளவில்லை” என்று பாஸ்கல் லாமி கூறினார்.
ஆயினும், கடந்த 21ஆம் தேதி முதல் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், தோஹா சுற்றில் எழுப்பப்பட்ட 20 முக்கியப் பிரச்சனைகளில் 18இல் ஒத்த கருத்து உருவானதாகவும், விவசாய மானியம், தொழிலக பொருட்களின் இறக்குமதித் தீர்வை தொடர்பான இரண்டு பிரச்சனைகளில் மட்டுமே தீர்வு எட்டப்படவில்லை என்று பாஸ்கல் லாமி தெரிவித்தார்.
இவ்விரு பிரச்சனைகளுக்கும் தீர்வை எட்ட பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றே உறுப்பினர்கள் விரும்பியதாகவும், ஆனால் இந்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் எழுந்த வேறுபாடுகள் குறித்து உறுப்பு நாடுகள் தெளிவான நிலையை எட்டியப்பிறகு மீண்டும் பேசுவதே பயனளிக்கும் என்று தான் தீர்மானித்ததாகவும் பாஸ்கல் கூறினார்.
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு இந்தியாவும், சீனாவுமே காரணம் என்று அமெரிக்க உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் குற்றம்சாற்றின. ஆனால், தோல்விக்கு எந்த ஒரு தரப்பும் காரணமல்ல என்று தெளிவுபடுத்திய பாஸ்கல் லாமி, இது ஒட்டுமொத்த தோல்வியே என்று கூறினார்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது தனக்கு வருத்தமளிக்கிறது என்று இந்தியாவின் சார்பாக பங்கேற்ற வர்த்தக அமைச்சர் கமல் நாத் கூறினார்.
“கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு வகையிலும் தீர்வு காண முயற்சித்தோம். ஆனால் அதன் முடிவு தோல்வியே என்பது வருத்தமளிக்கிறது” என்று கமல் நாத் கூறினார்.
“தங்கள் நாட்டின் ஏழை விவசாயிகளின் நலனை பாதுகாக்கவேண்டும் என்ற கவலை வளரும் நாடுகளுக்கு உள்ளது. அவர்களின் பாதுகாப்பு பிரச்சனையே கடைசி சுற்றுப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காண முடியாமல் போய்விட்டது” என்று கமல் நாத் கூறினார்.