தனது விவசாயிகளுக்கு அளித்து வரும் மானியத்தில் ஒரு டாலரையாவது குறைக்க அமெரிக்கா தயாராக உள்ளதா என்று கேள்வி எழுப்பியிருந்த மத்திய அயலுறவு அமைச்சர் கமல்நாத்திற்கு, 1 டாலர் நோட்டை அமெரிக்கா வழங்கியுள்ளது.
அமெரிக்கக் கருவூலச் செயலர் ஹென்றி பால்சன் கையெழுத்திட்ட ஒரு டாலர் நோட்டுடன் கூடிய அமெரிக்கக் கருவூலத்தின் வண்ணமயமான உறையை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி சூசன் ச்வாப் இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத்திடம் வழங்கினார்.
"என்னிடம் வந்த சூசன் ச்வாப், உங்களுக்கு ஒரு டாலர் ஒப்பந்தம் வேண்டுமா என்று கேட்டார்.... பிறகு தனது கைப்பையைத் திறந்து எனது நண்பர் பால்சன் கையெழுத்திட்ட ஒரு டாலர் நோட்டு இருந்த அமெரிக்க கருவூலத்தின் உறையை எடுத்து என்னிடம் கொடுத்தார். அதற்கு நான், இந்த ஒரு டாலரைக் கூட பால்சன்தான் கொடுத்துள்ளார், நீங்கள் அல்ல என்று சூசனிடம் கூறினேன்" என்று கமல்நாத் கூறியுள்ளார்.
உலகளாவிய வர்த்தகம் தொடர்பான தோஹா சுற்றுப் பேச்சில் ஒப்பந்தத்தை எட்டுவதற்காக, தங்களது நாட்டு விவசாயிகளுக்கு அளித்து வரும் மானியத்தை உண்மையாக ரத்து செய்வதற்கு அமெரிக்கா தயாரா என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் சவால் விட்டுள்ள கமல்நாத், "அமெரிக்கா தனது விவசாயிகளுக்கு அளித்து வரும் மானியத்தில் ஒரு டாலரையாவது குறைக்குமானால், பேச்சிற்குத் திரும்ப இந்தியா தயாராக உள்ளது" என்று கூறியிருந்தார்.