ஜெனிவாவில் நடைபெற்று வரும் உலக வர்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தையில் வளர்ந்த நாடுகளின் நிர்ப்பந்தங்களினால் சமவாய்ப்பு இல்லாத நகல் ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அடியணியக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
உலக வர்த்தக அமைப்பில் விவசாயம், தொழில் துறை உற்பத்திப் பொருட்கள், சேவைத் துறை ஆகியவற்றில் உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா உட்பட 30 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் உடன்பாடு ஏற்படுவதற்கு முட்டுக்கட்டையாக அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனில் உள்ள வளர்ந்த நாடுகளும் விவசாய துறைக்கு அளித்து வரும் மானியத்தை குறைக்க மறுத்து வருகின்றன.
இந்நிலையில், ஜெனிவாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு )பொலிட்பீரோ) விடுத்துள்ள அறிக்கையில், இந்த பேச்சுவார்த்தையின் போது கொடுக்கப்பட்டுள்ள நகல் ஒப்பந்தம் வளரும் நாடுகளுக்கும், வளர்ந்த நாடுகளுக்கும் சம வாய்ப்பு வழங்குவதாக இல்லை. ஒரு தலைப்பட்சமாக அமெரிக்கா போன்ற வளரும் நாடுகளுக்குச் சாதகமாக உள்ளது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து விடக்கூடாது.
அமெரிக்கா இந்த ஒருதலைப்பட்சமான ஒப்பந்த்தை ஏற்றுக் கொள்ளுமாறு இந்தியா மீது நிர்பந்தம் செலுத்துகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ஜெனிவாவில் நடந்து வரும் பேச்சுவார்தையில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் இந்தியா தனது நிலையை விட்டுக் கொடுக்க கூடாது. இவ்வாறு செய்வது நாட்டின் நலனுக்கு செய்யும் துரோகமாகும்.
அமெரிக்காவின் தலைமையில் வளர்ந்த நாடுகள் ஜெனிவாவில் உடன்படிக்கை செய்து கொள்ளும்படி நிர்ப்பந்தம் செலுத்துகின்றன. இது வளரும் நாடுகளின் நலனுக்கு எதிரானது.
உலக வர்த்தக அமைப்பின் டைரக்டர் ஜெனரல் ஜூலை 25ஆம் தேதி வெளியிட்டுள்ள நகல் ஒப்பந்தம் விவசாயம், தொழில் துறை உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. இதில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள், விவசாய துறைக்கு அளித்து வரும் மானியத்தை குறைக்காமல் அப்படியே வைத்துக்கொள்ளும்.
அதே நேரத்தில் வளரும் நாடுகள் விவசாய விளை பொருட்கள், தொழில் துறை உற்பத்தி பொருட்களின் இறக்குமதி வரியை பெருமளவு குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வளரும் நாடுகளின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது அர்த்த மற்றது. இந்த மாதிரி நடவடிக்கைகள் தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையில் அடைந்துள்ள முன்னேற்றதை கேலிக் கூத்தாக்குகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.