உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கும், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைக்குத் தீர்வு காண புதியதொரு திட்டத்தை உலக வர்த்தக அமைப்பு தந்துள்ளது.
விவசாய விளைபொருட்களுக்கு வளர்ந்த நாடுகள் அளித்துவரும் மானியத்தை குறைப்பது தொடர்பாகவும், அந்நாடுகளின் தொழில் உற்பத்திப் பொருட்களுக்கு வளரும் நாடுகள் இறக்குமதித் தீர்வைகளை நீக்குவது தொடர்பாகவும் பொருட்கள் பிரிவுகளின் (sectoral initiative) அடிப்படையில் தீர்வு காணும் ஆலோசனைத் திட்டத்தை உலக வர்த்தக அமைப்பு அளித்துள்ளதாக இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலக வர்த்தக அமைப்பு அளித்துள்ள அந்த ஆலோசனைத் திட்டத்தின் மீது உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் பேசி வருவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். பொருட்கள் பிரிவுகளின் அடிப்படையில் தீர்வு காண அளிக்கப்பட்டுவரும் இத்திட்டத்தின்படி, வளரும் நாடுகள் தங்களின் ஒவ்வொரு பொருளுக்கும் உலக சந்தையில் உள்ள வணிக மதிப்பில் அந்நாட்டிற்கு உள்ள பங்கிற்கு ஈடான அளவிற்கு இறுதி முடிவு எடுப்பதில் அதன் நிலைக்கு மதிப்பளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, சிறப்புப் பொருட்கள் என்றும், சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடு என்றும் பேச்சுவார்த்தைக்கான பிரிவுகள் அளிக்கப்பட்டுள்ளன. சிறப்புப் பொருட்கள் என்று வளர்ந்த நாடுகள் குறிப்பிடும் பொருட்களுக்கு அந்நாடுகள் கொடுக்கும் சலுகைகளை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தாமல் வளரும் நாடுகள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதேபோல வளரும் நாடுகள் தங்கள் நாட்டின் உற்பத்தி மற்றும் விளைபொருட்களின் சந்தையைக் காத்துக்கொள்ள இறக்குமதிகளின் மீது விதிக்கும் தீர்வைகளை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தாமல் வளர்ந்த நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகளை இந்தியா எதிர்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கும் இறக்குமதித் தீர்வையை இந்தியா ரத்து செய்யவேண்டும் என்று வளர்ந்த நாடுகள் கோரிவருகின்றன.
ஜெனிவா மாநாட்டின் கடைசி நாளான இன்று நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லையெனில், மாநாட்டினை மேலும் ஒரு நாள் தொடர உலக வர்த்தக அமைப்பு யோசித்து வருகிறது.