காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது உட்பட பொருளாதார சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நேற்று மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூரில் இன்று ஸ்ரீராம் ஜெனரல் காப்பீடுத் திட்டத்தை சிதம்பரம் துவக்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களவையில் நேற்று பிரதமர் பதிலுரையில் இதை அறிவிக்க எண்ணி இருந்தார். ஆனால் மக்களவையில் கூச்சல் குழப்பமாக இருந்ததால், அவர் பதில் உரையை சமர்பிக்கவே முடிந்தது.
நாட்டின் வளர்ச்சிக்காக பொருளாதார சீர்திருத்தம் செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிலுவையில் இருக்கும் பல மசோதாக்களை நிறைவேற்ற தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம்.
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம், தொழிலாளர் நல வாழ்வு அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூக நல துறை ஆகிய அமைச்சகங்களின் மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
காப்பீடுத் துறை உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், அரசுக்கு எதிராக வாக்களித்த கட்சிகள் உட்பட எல்லா கட்சிகளையும் மத்திய அரசு அணுகும்.
தற்போது காப்பீடுத் துறையில் 26 விழுக்காடு அந்நிய நேரடி முதலீடு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதை காப்பீடு துறை திருத்த மசோதா மூலம் 49 விழுக்காடாக அதிகரிக்கப்படும் என்று சிதம்பரம் தெரிவித்தார்.
அவரிடம் பணவீக்கம் அதிகரிப்பது பற்றி கேட்டதற்கு பதிலளிக்கையில், பணவீக்கத்தை பற்றி ஒவ்வொரு வாரமும் பதிலளிக்கின்றோம். இதில் புதிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வு, மற்ற பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கிறது. இது இறக்குமதியாகும் பணவீக்கம். நாங்கள் இதை கட்டுப்படுத்த தேவையான பொருளாதார நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.