Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக பொருளாதாரம் சிக்கலை சந்திக்கிறது - சிங்கப்பூர் பிரதமர்!

உலக பொருளாதாரம் சிக்கலை சந்திக்கிறது - சிங்கப்பூர் பிரதமர்!
, திங்கள், 21 ஜூலை 2008 (15:13 IST)
அமெரிக்க பொருளாதார நெருக்கடியால், உலக பொருளாதாரம் மீண்டும் சிக்கலை சந்தித்து வருகிறது என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹீசின் லூங் கூறினார்.

சிங்கப்பூரில் இன்று ஆசியன் அமைப்பின் 41 வது அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் நடைபெறுகிறது.

இதை துவக்கி வைத்து சிங்கப்பூர் பிரதமர் லீ ஹீசின் லூங் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது :

ஆசிய பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக, ஆசியன் அமைப்பு நாடுகளில் ஸ்திரத்தன்மை இருப்பது வரவேற்க கூடியதே. அதே நேரத்தில் உலக அளவில் நிதி நெருக்கடி, வர்த்தக நிலைமையால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியால், இன்று மீண்டும் உலக பொருளாதார நிலை சிக்கலை சந்தித்து வருகிறது. உலக அளவிலான வர்த்தகமும் நெருக்கடியில் உள்ளது. தோஹா சுற்று பேச்சு வார்த்தை முன்னேற்றம் அடையாமல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. மற்றொரு முறை நெருக்கடி ஏற்பட்டால், ஆசியன் அமைப்பு நாடுகள் மீண்டும் ஒரு முறை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் ஆசியன் அமைப்பு நாடுகளுக்கும், இந்த பிராந்தியத்தின் முக்கிய நாடுகளுக்கும் இடையே பலமான நட்புறவு நீடிக்கிறது. குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நல்லுறவு இருப்பது வரவேற்க கூடியது.

தைவான் ஜனாதிபதியாக மா யெங் ஜூ தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வட கொரியா அதன் அணு சக்தி திட்டம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள சம்மதித்து உள்ளது. இதனால் ஒன்பது மாதம் கழித்து மீண்டும் ஆறு நாடுகளுக்கு இடையேயான பேச்சு வார்த்தை தொடங்க உள்ளது. இதனால் இந்த பிராந்தியத்தில் பதற்றம் தணிந்து உள்ளது.

நாம் ஆசியன் அமைப்பை பலப்படுத்தும் அதே நேரத்தில், பிராந்திய அளவிலான மற்றும் உலக அளவிலான நமது செல்வாக்கை இழந்துவிட‌க் கூடாது என்று கூறினார்.

இந்த கூட்டம் நடக்கும் போது ஆசியன் அமைப்புக்கும் சீனா, தென்கொரியா, ஜப்பான், இந்தியா, ஆஸ்‌ட்ரேலியா, நியூ ‌ஸீலாந்து, கனடா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடனும், ஐரோப்பிய யூனியனுடனும் இருதரப்பு பேச்சு வார்த்தையும் நடைபெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil