உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் ஊக வணிகத்தில் ஈடுபடுபவர்களே என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
உலக சந்தையில் நாளுக்கு நாள் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதன் விலை அதிகரிப்பதால் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சென்ற மாதம் சவுதி அரேபியாவின் ஜட்டா நகரில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், இதனை பயன்படுத்தும் நாடுகளுக்கு இடையிலான கூட்டம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் பேசும் போது, கச்சா எண்ணெய் நாடுகள் இதன் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும். ஊக வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களும், முன்பேர சந்தையில் வர்த்தகம் செய்பவர்களும் கச்சா எண்ணெய் விலையை செயற்கையாக உயர்த்துகின்றனர். இதற்கு ஆதாரம் உள்ளது என்று கூறினார்.
இந்நிலையில் புதுடெல்லியில் இன்று பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சிதம்பரம், 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 60 டாலருக்கும் அதிகரித்தால், இதற்கு காரணம் ஊக வணிகர்களால்தான் என்பது தெளிவாக தெரிகிறது. இதற்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் உள்ளன. நான் ஜட்டாவிற்கு புறப்படுவதற்கு முன்பே, இதை முழுவதுமாக படித்து பார்த்து விட்டேன் என்று தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொதுத் துறை பெட்ரோலிய நிறுவனங்கள் ரூ.2,46,000 கோடி இழப்பை சந்திக்கின்றன. மத்திய அரசு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.3, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.50 அதிகரித்தது. இந்த கூடுதல் விலையால், ஏற்படும் மொத்த இழப்பில் ஐந்தில் ஒரு பங்கு வருவாய் கிடைக்கும். மற்றவை எண்ணெய் நிறுவனங்களுக்கு கடன் பத்திரங்கள் வழங்கி சரிப்படுத்தப்படும் என்று கூறினார்.