மிளகு விலை அடுத்த இரண்டு மாதங்களில் 15 விழுக்காடு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உலக அளவில் அதிக அளவு மிளகை வியட்நாம் ஏற்றுமதி செய்கிறது. இங்கு மிளகு பயிரிடப்படும் பகுதிகளில் மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் வியட்நாமில் மிளகு உற்பத்தி குறைந்துள்ளது.
வியட்நாமில் கடந்த வருடம் 90 ஆயிரத்து 300 டன் மிளகு உற்பத்தியானது. இந்த வருடம் 87 ஆயிரம் டன்னாக குறைந்துவிட்டது என வியட்நாம் மிளகு உற்பத்தியாளர் சங்கம் நேற்று தெரிவித்தது.
இதேபோல் மற்ற நாடுகளிலும் மிளகு உற்பத்தி குறைந்திருக்கின்றது. அத்துடன் சென்ற வருட இருப்பு குறைவாக இருப்பதால், அடுத்து வரும் மாதங்களில் உலக சந்தையில் மிளகு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் அதிக அளவு மிளகு வர்த்தகம் நடக்கும் கொச்சியிலும் விலை உயர வாய்ப்புள்ளது. இங்கு அடுத்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விலை 10 முதல் 15 விழுக்காடு வரை உயரும் இதன் விலை 100 கிலோ ரூ.17 ஆயிரமாக அதிகரிக்கும் என்று கொச்சியைச் சேர்ந்த வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் இருந்து சென்ற வருடம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 விழுக்காடு அதிகரித்து. இந்நிலையிலும் சென்ற வருடம் 35 ஆயிரம் டன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்த வருடம் ஜனவரி முதல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 விழுக்காடு வரை குறைந்துள்ளது. இந்த வருடம் இந்தியாவில் இருந்து மிளகு ஏற்றுமதி உயரும்.
வியட்நாம் மிளகு உற்பத்தியாளர்கள் சங்கம், இந்த வருடம் உலக அளவில் மிளகு உற்பத்தி 2 லட்சத்து 59 ஆயிரம் டன்னாக இருக்கும். இதன் தேவை 3 லட்சத்து 5 ஆயிரம் டன்னாக இருக்கும் என்ற கணிப்பை மே மாதம் வெளியிட்டது.
உலக அளவில் மிளகு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக 50,000 டன் என்ற அளவிலேயே இருக்கிறது. இந்த நிதி ஆண்டில் ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களில் 5,750 டன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது (இது சென்ற ஆண்டில் இதே மாதங்களில் ஏற்றுமதி செய்த அளவைவிட 17 விழுக்காடு அதிகம்). இந்தியாவில் வழக்கமாக டிசம்பர் மாதங்களில் மிளகு செடிகளில் இருந்து பறிக்கப்படும். இந்த வருடம் ஒரு மாதம் தாமதமாக ஜனவரியில் தான் பறிப்பு வேலை துவங்கியது. இதே மாதிரி வியட்நாமிலும் ஒரு மாதம் தாமதமானது.
இந்தியாவின் மொத்த மிளகு உற்பத்தியில், கேரளாவில் மட்டும் 90 விழுக்காடு உற்பத்தியாகிறது. இந்த வருடம் தென் மேற்கு பருவமழை போதிய அளவு கேரளாவில் பெய்யவில்லை. ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை சராசரி அளவைவிட 44 விழுக்காடு மழை குறைவாக பெய்துள்ளது. இதனால் அடுத்த வருட மிளகு உற்பத்தி பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.இது போன்ற காரணங்களினால் மிளகு விலை உயரும் என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.