Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜவுளி ஆலைகள் வேலை நிறுத்தம்!

ஜவுளி ஆலைகள் வேலை நிறுத்தம்!
, வியாழன், 10 ஜூலை 2008 (13:25 IST)
பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி தமிழத்தில் உள்ள நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள் நேற்று வேலை நிறுத்தம் செய்தன.

பருத்தி ஏற்றுமதி செய்வதால், இதன் விலை அதிகரித்துள்ளது. இதனால் நூல் விலை உயர்வதுடன், ஜவுளி தொடர்பான எல்லா வகை தொழில்களும் பாதிக்கப்படுகின்றன. ஆயத்த ஆடை, பின்னலாடை போன்ற ஏற்றுமதி நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட முடியவில்லை.

இந்த வருட இறுதி வரை பருத்தி ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜவுளி ஆலைகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் வகேலா பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க முடியாது என்று திட்ட வட்டமாக நேற்று முன்தினம் பெங்களூருவில் அறிவித்தார்.

இந்நிலையில் பருத்தி ஏற்றுமதி தடை, பருத்தி ஏற்றுமதிகக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை, ஏற்றுமதி கட்டுப்பாடு, பருத்தி இறக்குமதிக்கான வரி ரத்து, விவசாய துறைக்கு வழங்குவது போல் ஜவுளித் துறைக்கும் 7 விழுக்காடு வட்டியில் கடன் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகள், நெசவு ஆலைகள் வேலை நிறுத்தம் செய்தன.

தமிழகத்தில் பெரிய நூற்பாலைகள் முதல் சிறிய அளவிலான நெசவாலைகள் வரை சுமார் 4,500 ஜவுளித் துறை நிறுவனங்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டன.

இந்த ஆண்டு 315 லட்சம் பொதி பருத்தி உற்பத்தியாகி உள்ள நிலையில், அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பருத்தி ஆலோசனை வாரியத்தின் தகவல் படி, இந்த ஆண்டு இருப்பு 100 லட்சம் பொதிகளில் இருந்து 65 லட்சம் பொதிகளாக குறையும்.

உலக ஜவுளி சந்தையில் நமக்கு போட்டியாளர்களான சீனா போன்ற நாடுகள், உள்நாட்டு தேவைக்கு 40 விழுக்காடு வரை இருப்பில் வைத்துக் கொள்கின்றன.

இந்நிலையில் நமது நாட்டில் இருந்து அதிக அளவு பருத்தி ஏற்றுமதி செய்யப்படுவதால் உள்நாட்டு தேவைக்கான இருப்பு 20 விழுக்காடாக குறையும். இதனால் பருத்தி விலை அதிகரிக்கும் என்று தமிழ்நாடு ஜவுளி ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil