உலக அளவில் உணவு தானிய விலை 75 விழுக்காடு உயர காரணம், தாவர எரிபொருளே என்று உலக வங்கியின் ஆய்வு கூறுகிறது.
உலக வங்கி உணவு தானியங்களின் விலைகள் அதிகரிப்பதற்கான காரணத்தை ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வறிக்கை இதுவரை வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இதை பிரிட்டனில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழான கார்டியன் கடந்த வெள்ளிக் கிழமை வெளியிட்டது.
அதன் செய்தியில், தாவர எரி பொருளால் உணவு தானியங்களின் விலை 3 விழுக்காடு அதிகரித்துள்ளது என அமெரிக்கா தெரிவித்து இருந்தது. ஆனால் உலக வங்கி ஆய்வில் இருந்து, உணவு தானிய விலை 75 விழுக்காடு வரை உயர்ந்து இருப்பதற்கு காரணம் தாவரி எரி பொருளே (பயோ-ஃப்யூல்) என்று தெரிய வந்துள்ளது.
சீனாவிலும் இந்தியாவிலும் மத்திய வருவாய் பிரிவினரின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பது தான் உணவு தானிய விலை உயர்வுக்கு காரணம் என்று மே மாதத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் குற்றம் சாற்றினார்.
ஜார்ஜ் புஷ்சுக்கு தர்ம சங்கடம் ஏற்படுவதை தவிர்க்கவே உலக வங்கியின் ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை என்று கார்டியன் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் ஜப்பானில் ஜி-8 என்ற வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் விலை உயர்வது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
போக்குவரத்து, எரி சக்தி உற்பத்தி, தொழில் துறை பயன்பாட்டிற்கான எரி எண்ணெயின் உபயோகத்தை உடனடியாக குறைத்துவிட முடியாது. அதே நேரத்தில் எரி எண்ணெய் தயாரிப்பதற்காக அதிக அளவு உணவு தானியங்களை பயன்படுத்துவது அதிக மக்களை பஞ்சத்தின் பிடியில் தள்ளுவதற்கு சமமாகும். நீண்ட கால நோக்கில் சிந்தித்துப் பார்த்தால் அதிக வாய்ப்புக்கள் உள்ளன. உணவு பஞ்சம் ஏற்பட்டால் அனைவரும் இறக்க வேண்டியதுதான். இதனை தவிர்க்க சரியான வழி கண்டறியப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.