போர்ட் நிறுவனம் தனது பியஸ்டா கார்களில் எஸ்.எக்.ஐ. என்ற புதிய வகையை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார்கள் கவர்ச்சியான தோற்றத்துடன் அதிபட்ச மைலேஜ் மற்றும் பாதுகாப்பையும் வழங்கக் கூடியவாறு தயாரிக்கப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற போர்ட் கார் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான பியஸ்டா 1.6 எஸ்.எக்ஸ்.ஐ. நடுத்தர வகை கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களைப் பயன்படுத்தி இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பியஸ்டா கார்கள் கண்ணைக் கவரும் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. இக்கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள உதிரிப் பாகங்களின் தரமும் நிகரற்றவாறு இருக்கும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதிய பியஸ்டாவில் பெட்ரோல் பயன்பாட்டிற்கு உகந்தவற்றில் டியூராடெக் என்ஜினும், டீசல் பயன்பாட்டிற்கு உகந்தவற்றில் டியூராடார்க் என்ஜினும் (டர்போ டீசல்) பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு என்ஜின்களும் சிறந்த மைலேஜைத் தர வல்லவை.
புதிய பியஸ்டா பெட்ரோல் கார் 1.6 EXI, 1.6 ZXI மற்றும் 1.6 SXI ஆகிய மாடல்களிலும் டர்போ டீசல் கார் 1.4 EXI, 1.4 ZXI மற்றும் 1.4 SXI ஆகிய மாடல்களிலும் கிடைக்கிறது. இத்துடன் கூடுதலாக பியஸ்டா 1.6 S என்ற ஸ்போர்ட் காரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பியஸ்டா பெட்ரோல் கார்கள் ரூ. 6,57,804 முதலும், டீசல் கார்கள் ரூ. 7,44,999 முதலும் சந்தையில் கிடைக்கின்றன. 101 PS பெட்ரோல் டியூரோ டெக் என்ஜினுடன் மட்டுமே கிடைக்கும் பியஸ்டா 1.6 S கார் ரூ. 7,57,293 முதல் கிடைக்கும். (மும்பை Ex-showroom விலை).
இந்தக் கார்கள் பிளாட்டினம், மூன்டஸ்ட் சில்வர், பப்ரிகா ரெட், பிரஸ் ஸ்டீல், டைமண்ட் வொய்ட், பாந்தர் பிளாக் ஆகிய வண்ணங்களுடன் தற்போது மொரெல்லோ, தண்டர் ஆகிய புதிய வண்ணங்களிலும் கிடைக்கின்றன.
பாதுகாப்பு அம்சங்கள்!
புதிய பியஸ்டா எஸ்.எக்ஸ்.ஐ. கார்களில் ஓட்டுநருக்கும் பயணிப்பவருக்கும் தனித்தனியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என்ற புதிய தொழில்நுட்பம் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதி, திருட்டுத் தடுப்பு தொழில்நுட்பம், ஸ்டீயரிங் லாக், ரிமோட் மூலம் பெட்ரோல் டேங்க் திறப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இதில் அடங்கும்.
இந்தியாவின் தட்பவெப்பத்தை கணக்கிட்டு அதிகபட்ச வெப்பத்தையும், அதிகபட்சக் குளிரையும் தாங்கும் வகையில் இப்புதிய காரின் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.