தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு சங்க மாநில தலைவர் ஜி. சங்கரன் தலைமை தாங்கினார்.
பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை ரிலையன்ஸ், ஹால்டா போன்ற ஒரு சில நிறுவனங்களே உற்பத்தி செய்கின்றன.
இந்த மூலப் பொருட்களின் விலையின் அடிப்படையிலேயை, பிளாஸ்டிக் தொழிற்சாலைகளின் வருவாய் உள்ளது.
ரிலையன்ஸ இன்டஸ்டிரிஸ் பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, உள்நாட்டில் செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது.
பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் தட்டுப்பாடில்லாமல், கட்டுப்படியாக கூடிய விலையில் மத்திய அரசு கிடைக்க வழி செய்யவேண்டும்.
பிளாஸ்டிக் மூலப் பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும். மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 5 விழுக்காடு சுங்க வரியை நீக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வற்புறுத்தி உண்ணாவிரதம் நடந்தது.
உண்ணாவிரதத்தில் வணிகர் பேரவை மாநில தலைவர் த. வெள்ளையன், இந்திய கம்யூனிஸ்டு தலைவர் தா. பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ். கண்ணன், மாநில நிர்வாகிகள் வெங்கடாசலம், அசோகன், சண்முகநாதன், கனகாம் பரம், சென்னை பிளாஸ்டிக் சங்க பொருளாளர் தமிழ் செல்வன், செயலாளர் முரளி, இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், ராஜேஷ் வோரா உள்பட 2,000 பேர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கதவடைப்பு செய்து உண்ணா விரதத்தில் பங்கேற்றனர்.
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அரசிடம் பதிவு செய்துள்ள 8 ஆயிரம் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் உள்ளன. பதிவு செய்யப்படாத 9,000 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. இதன் மூலம் நேரடியாக மூன்று லட்சம் பேருக்கும் மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.