பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கு காரணம், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது வருவதுதான் என்று ஓபெக் அமைப்பின் தலைவர் சாகிப் கலில் தெரிவித்தார்.
ஓபெக் அமைப்பு என்பது பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு. இந்த அமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இதன் தலைவராக அல்ஜிரியா நாட்டின் எரிசக்தி அமைச்சர் சாகிப் காலில் உள்ளார்.
இவர் அல்ஜிரியா செய்தி நிறுவனத்திற்கு அளிதத் பேட்டியில், அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அடுத்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும். நாங்கள் டாலரின் மதிப்பை கண்காணித்து வருகின்றோம். ஏனெனில் டாலரின் மதிப்பு 1 விழுக்காடு குறைந்தால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு நான்கு டாலர் அதிகரிக்கும்.
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தற்போதைய உற்பத்தியே அளவே போதுமானது என்று கருதுகின்றன. இதன் விலை அதிகரிப்பதை யாருமே விரும்பவில்லை.
கச்சா விலை உயர்வுக்கு அணு சக்தி தொடர்பாக, ஈரானுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்ட நிலை போன்ற அரசியல் ரீதியானவைகளும் மற்றொரு காரணம்.
கச்சா விலை உயர்வுக்கு 60 விழுக்காடு டாலரின் மதிப்பு குறைவதும், அரசியல் ரீதியான பதட்டமும், 40 விழுக்காடு எதனால் எரிசக்தி எண்ணெயும் காரணம் என்று சாகிப் காலில் தெரிவித்தார்.