நியாய விலை கடைகளில் துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாலின் சமையல் எண்ணெய் ஆகியவை தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
இது பற்றி தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ''சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாலின் சமையல் எண்ணெய் கடந்த 14-4-2007 முதல் தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்களின் தேவைக்கேற்ப துவரம்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை 1/4 கிலோ, 1/2 கிலோ மற்றும் 1 கிலோ அளவில் வழங்கப்பட்டு வருகிறது. துவரம் பருப்பு அதிகப்படியான மாத விற்பனை 5263 மெட்ரிக் டன்கள், உளுத்தம் பருப்பு 1978 மெட்ரிக் டன்கள், சத்து சேர்க்கப்பட்ட (செறிவூட்டப்பட்ட) கோதுமை மாவு 2375 மெட்ரிக் டன்கள் பாமாலின் சமையல் எண்ணெய் 55.34 லட்சம் பாக்கெட்டுகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது கையிருப்பில் துவரம் பருப்பு 6310 மெ.டன்களும், உளுத்தம் பருப்பு 3406 மெ.டன்களும், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு 1558 மெ.டன்களும் உள்ளது. பாமாலின் சமையல் எண்ணெய் 21.56 லட்சம் லிட்டர் இருப்பில் உள்ளது.
தேவையான பாமாலின் சமையல் எண்ணெய் தொடர்ந்து பேக்கிங் பிரிவுகளிலிருந்து வந்த வண்ணம் உள்ளது. மேலும், பாமாலின் சமையல் எண்ணெய்யைப் பொறுத்தவரை மத்திய அரசின் மூலம் ஜூன் 2008 முதல் மாதம் ஒன்றுக்கு 1.72 கோடி பாக்கெட்டுகளாக பெற்று, சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் எவ்வித தடையுமின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.