பாரத ஸ்டேட் வங்கி வீட்டு கடனுக்கான வட்டியை அரை விழுக்காடு அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஜூன் 24ஆம் தேதி வட்டி விகிதத்தையும், வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிகத்தையும் உயர்த்தியது.
இதை தொடர்ந்து வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகரித்தன.
இப்போது வீட்டு கடனுக்கான வட்டியையும் உயர்த்தி வருகின்றன. பாரத ஸ்டேட் வங்கி கடனுக்கான மாறும் வட்டி (ஃப்ளோட்டிங் ரேட்) விகிதத்தில் வாங்கியுள்ள கடனுக்கான வட்டியை அரை விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த புதிய வட்டி ஜூன் 27ஆம் தேதி முதல் கணக்கிடப்படும் என்று ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.
ரூ.30 லட்சம் வீட்டு கடனை 20, 25 வருடங்களில் திருப்பி செலுத்தும் வகையில் வாங்கிய கடனுக்கு 11 விழுக்காடு வட்டி கணக்கிடப்படும் (முன்பு 10.5 %).
இதன்படி 25 வருடங்களில் திருப்பி செலுத்தும் கடனுக்கு, ரூ.1 லட்சத்துக்காண மாதந்திர தவணை ரூ.945இல் இருந்து ரூ.980 ஆக அதிகரிக்கும்.
20 வருட தவணை கடனுக்கு ரூ.1 லட்சத்துக்காண தவணை ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.1035 ஆக உயரும்.
10 முதல் 15 வருடங்களில் திருப்பி செலுத்தும் கடனுக்கு ரூ.1 லட்சத்திற்கு 10.75 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும். இதன் மாதந்திர தவணை ரூ.35 அதிகரிக்கும்.
ஐந்து வருடத்தில் திருப்பி செலுத்தும் கடனுக்கான வட்டியும் பத்து விழுக்காட்டில் இருந்து 10.5 விழுக்காடக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் படி ரூ.1 லட்சத்திற்கு திருப்பி செலுத்தும் மாதந்திர தவணை ரூ.25 உயரும். மாதந்திர தவணை ரூ.2,150 திருப்பி செலுத்த வேண்டும்.
நிரந்தர வட்டி விகித்தில் வாங்கிய கடனுக்கான வட்டி உயர்த்தப்படவில்லை. இது முன்பு இருந்த அளவான 12.75% விழுக்காடாகவே தொடரும்.
தனியார் துறை வங்கிகளான ஹெச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. ஆகியன ஏற்கனவே வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை 0.75 விழுக்காடு அதிகரித்துவிட்டன.
தற்போது ஸ்டேட் வங்கியும் வட்டியை உயர்த்தியுள்ளதால் மற்ற பொதுத்துறை வங்கிகளும் வட்டியை அதிகரிக்கும்.