பணவீக்கம் ஜூன் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.63 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 11.42 விழுக்காடாக இருந்தது.
(இதே காலகட்டத்தில் சென்ற வருடம் பணவீக்கம் 4.32 விழுக்காடு).
இந்த வாரத்தில் மொத்த விலை குறியீட்டு எண் 0.4 % அதிகரித்து 237.1 ஆக உயர்ந்துள்ளது.
மொத்த விலை குறியீட்டு எண் அட்டவணையில் அத்தியாவசிய பொருட்களின் பிரிவு 0.5 % உயர்ந்து, 244.3 ஆக உயர்ந்துள்ளது.
உணவு பொருட்களின் குறியீட்டு எண் 0.6% உயர்ந்து, 233.6 ஆக உயர்ந்துள்ளது.
தேயிலை விலை 4%, பழம், காய்கறி, மக்காச்சோளம், சோளம், கடல் மீன் விலை தலா 2% அதிகரித்துள்ளது.
உளுந்து, மல்லி, பயத்தம் பருப்பு, மசாலா பொருட்கள் விலை தலா 1% அதிகரித்துள்ளது.
தோல் பதனிடப்படுத்தும் பொருட்களின் விலை 4%, கொப்பரை தேங்காய் 3%, பருத்தி, ஆமணக்கு விதை, எண்ணெய் கடுகு விலை தலா 1% அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் கால்நடை தீவனங்களின் விலை 1% குறைந்துள்ளது.
பர்னேஷ் எண்ணெயின் விலை 2 விழுக்காடு குறைந்ததால், பெட்ரோலிய வகைகள், மின்சாரம் பிரிவு அட்டவணை குறியீட்டு எண் 0.1% குறைந்துள்ளது.
உற்பத்தி பொருட்களின் அட்டவணை குறியீட்டு எண் 0.5% அதிகரித்துள்ளது.
சமையல் எண்ணெய் போன்ற உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களின் குறியீட்டு எண் 0.9% அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கச்சா சமையல் எண்ணெய் விலை 8%, பருத்தி எண்ணெய், நெல் உமியில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் விலை தலா 5%, நல்லெண்ணெய், இறக்குமதி செய்யப்படும் பாமாயில், சோயா எண்ணெய் விலை 1% அதிகரித்துள்ளது.
கோதுமை மாவு விலை 2% குறைந்துள்ளது.
இரசாயன பொருட்கள் மொத்த விலை குறியீட்டு எண் 0.6% அதிகரித்துள்ளது. ஆயுர்வேத மருந்துகள் விலை 9%, பினாயில் விலை 8%, வைட்டமின் டானிக் விலை 1% அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் வைட்டமின் மாத்திரை விலை 1% குறைந்துள்ளது.
உலோகம் அல்லாத மற்ற தாது பொருட்களின் குறியீட்டு எண் 0.1% அதிகரித்துள்ளது. இதற்கு சிமெண்ட் விலை அதிகரித்ததே காரணம்.
உலோக பிரிவு குறியீட்டு எண் 0.8% உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் மென் இரும்பு விலை 8%, உருக்கு தகடு வகை 6%, இரும்பு கம்பி விலை 3%, மற்ற வகை உருக்கு பொருட்கள் விலை 2% உயர்ந்ததே.
இயந்திரம், இயந்திர கருவிகள் குறியீட்டு எண் 0.2% அதிகரித்துள்ளது. சுவிட்ச் கியர் விலை 10%, பாட்டரி செல் 4%, பம்புகள் விலை 1% உயர்ந்துள்ளது.
வாகனப் பிரிவு குறியீட்டு எண் 0.1% குறைந்துள்ளது. சைக்கிள் விலை 1% உயர்ந்துள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடன்களின் மீதான வட்டி விகிதத்தையும், வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தையும் இரண்டு நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி குறைத்தது. இதன் மூலம் பணப் புழக்கம் ரூ.19,000 கோடி அளவிற்கு குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அடுத்த வெள்ளிக் கிழமை வெளியிடப்படும் பணவீக்கம் அளவு, இதை விட அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
இதற்கு முன் ஏப்ரல் 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 7.61 விழுக்காடு என்று மத்திய அரசு முன்மதிப்பாக கூறியிருந்தது. இது 8.27% என்று இறுதியாக அறிவித்துள்ளது.