Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா-இந்தோனேஷியா தாராள வர்த்தக ஒப்பந்தம்!

இந்தியா-இந்தோனேஷியா தாராள வர்த்தக ஒப்பந்தம்!
, புதன், 2 ஜூலை 2008 (16:47 IST)
இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முட்டுக் கட்டையாக இருந்தவைகளை சரி செய்யும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

ஆசியான் அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன.

ஆசியான் நாடுகளிடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கு இந்தியா பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதில் இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இந்தியாவில் இருந்து ஜவுளி உட்பட சில பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு அளிக்க இந்தோனிஷியா மறுத்து வருகிறது.

இதே போல் இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு முழு இறக்குமதி வரி விலக்கு அளிக்க இந்தியா மறுத்து வருகிறது.

இதனால் ஆசியான் அமைப்பு நாடுகளுடன் இந்தியா தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாமல் இருக்கின்றது.

ஏனெனில் இந்தினேஷியாவில் இருந்து அதிக அளவு ஏற்றுமதியாகும் பொருட்களில் பாமாயில் முதன்மை இடத்தை வகிக்கிறது. தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா பாமாயில் இறக்குமதி வரியை முழுமையாக நீக்கினால், இந்தியாவுக்கு அதிக அளவு பாமாயில் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்தோனேஷியா கருதுகிறது.

இதுவரை உள்நாட்டு எண்ணெய் வித்து விவசாயிகளை பாதுகாக்க, இந்தியா அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கு இறக்குமதி வரி விதித்து வருகிறது.

ஆனால், சமீப காலமாக உணவுப் பொருள், குறிப்பாக சமையல் எண்ணெயின் உள்நாட்டு உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே அதிக இடைவெளி ஏற்பட்டு வருகிறது. இதனால் உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதன் விளைவாக பணவீக்கமும் அதிகரிக்கிறது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், சமையல் எண்ணெய் விலை உயராமல் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு சமீபத்தில் சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா எண்ணெய் இறக்குமதி வரியை முழுமையாக நீக்கியது.

உள்நாட்டில் நிலைமை சீரடைந்து, சமையல் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில், எண்ணெய் வித்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், இறக்குமதி வரி விதிக்கும் அதிகாரம் வேண்டும் என்று இந்தியா கருதுகிறது.

இரு நாடுகளிடையே இந்த கருத்து வேறுபாடு காரணமாக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உள்ள தடை விரைவில் நீங்கும் என்று தெரிகிறது.

இது குறித்து உயர் அதிகாரி கூறுகையில், பாமாயில் பிரச்சனையில் உடன்பாடு எட்டும் நிலை உருவாகியுள்ளது. இந்தோனிஷியாவுடனான தாராள வர்த்தக ஒப்பந்தத்தம், அதன் தலைநகர் ஜகார்தாவில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் கையெழுத்தாகும். இதன்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் சில பொருட்களை இந்தோனிஷியா வரி விதிக்கும், அல்லது தடை விதிக்கும் அதிகாரத்தை பெற்று இருக்கும்.

அதே போல் இந்தியா பாமாயில் இறக்குமதியை கட்டுப்படுத்தும் அல்லது வரி விதிக்கும் அதிகாரத்தை பெற்று இருக்கும்.

ஆசியன் நாடுகளுடான ஒப்பந்தம் ஏற்பட மற்றொரு தடையாக இருக்கும் விஷயம், இந்தியா சுத்திகரிக்கப்படாத பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க கூடாது என்று மலேஷியா வலியுறுத்தி வருவதே. இதே மாதிரி புருனயேயும் பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க கூடாது என்று கூறிவருகிறது.

புருனேயின் கோரிக்கைக்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் புருனேயில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒரே பொருள் பாமாயில் மட்டுமே. ஆனால் மலேஷியாவின் நிலை வேறுமாதிரியானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா 10 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஆசியான் அமைப்புடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கான விதி முறைகளை உருவாக்க 2003 ஆம் ஆண்டு அக்டோபரில் கையெழுத்திட்டது. இரண்டு வருட காலத்திற்குள் ஒப்பந்தத்தில் இறுதி ஒப்பந்தம் செய்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்தோனிஷியா, மலேசியா, புருனே ஆகிய நாடுகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இறுதி ஒப்பந்தம் ஏற்படவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil