இந்தியாவின் அந்நிய நாடுகளுடனான வர்த்தக பற்றாக்குறை இருமடங்காக அதிகரித்துள்ளது.
ஒரு நாடு அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மதிப்பிற்கும், அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மதிப்பிற்கும் இடையே உள்ள இடைவெளி வர்த்தக பற்றாக்குறை எனப்படுகிறது.
ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமானால் வர்த்தக பற்றாக்குறை ஏற்படும்.
இதற்கு மாறாக இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமானால் வர்த்தக நிலுவை அதிகரிக்கும்.
இந்தியாவின் இறக்குமதி, ஏற்றுமதியை விட இரு மடங்காக இருப்பதால் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
சென்ற நிதி ஆண்டில் (2007-08) இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 17.4 பில்லியன் டாலராக உள்ளது. (1 பில்லியன்-100 கோடி) இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1.5 விழுக்காடு.
2006-07 ஆம் நிதி ஆண்டில் வர்த்தக பற்றாக்குறை 9.8 பில்லியன் டாலாரக இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1.1 விழுக்காடு.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதே, வர்த்தக பற்றாக்குறை அதிகரித்ததற்கு முக்கிய காரணம். இந்தியாவின் தேவையில் 70 விழுக்காடு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
சென்ற நிதி ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் வர்த்தக பற்றாக்குறை 1.04 பில்லியன் டாலராக உள்ளது. (இதற்கு முந்தைய நிதி ஆண்டில் இந்த காலகட்டத்தில் வர்த்தக நிலுவை கூடுதலாக இருந்தது. இந்தியாவின் இறக்குமதியைவிட, ஏற்றுமதி அதிக அளவாக இருந்தது).