ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான வட்டி விகிதத்தையும், வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தையும் அரை (0.50%) விழுக்காடு அதிகரித்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், விலை உயர்வை தடுக்கவும் ரிசர்வ் வங்கி ரொக்க கையிருப்பு விகிதத்தையும், வட்டி விகிதத்தையும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி நேற்று மாலை வெளியிட்டது.
இதன் படி வட்டி உயர்வு உடனே அமலுக்கு வருகிறது. ரொக்க கையிருப்பு விகிதம் இரண்டு கட்டங்களாக அமல் படுத்தப்படும்.
இப்போது வங்கிகள் பெறும் வைப்பு நிதியில், ரிசர்வ் வங்கியில் வைக்கும் ரொக்க கையிருப்பு விகிதம் 8.25 விழுக்காடாக உள்ளது. இது ஜூலை 5 ஆம் தேதி முதல் 8.50 விழுக்காடாக உயர்த்தப்படும்.
பிறகு ஜூலை 19ஆம் தேதி முதல் 8.75 விழுக்காடாக அதிகரிக்கப்படும்.
ரொக்க கையிருப்பு விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், பணப்புழக்கம் 19 ஆயிரம் கோடி குறையும்.
இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி ரொக்க கையிருப்பு விகிதத்தை அதிகரித்துள்ளது.
சென்ற ஜூன் 11ஆம் தேதி ரொக்க கையிருப்பு விகிதத்தை 7.75 விழுக்காட்டில் இருந்து 8 விழுக்காடாக அதிகரித்தது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டி அதிகரிக்கும். குறிப்பாக வீட்டு கடன், வாகன கடன் உட்பட பல்வேறு கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும்.