பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் 11.05 (ஜூலை 7ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில்) விழுக்காடாக அதிகரித்துள்ளது.
விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய அரசும், காங்கிரஸ் கட்சித் தலைமையும் பல்வேறு வழிகளை ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று மாலை நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இன்று காலை சிதம்பரமும், ரிசர்வ் வங்கி கவர்னரும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தியை நிதி அமைச்சர் சிதம்பரம் சந்தித்து நிலைமையை விளக்கினார்.
மத்திய அரசு நேற்று பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.