இந்த நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8 விழுக்காடாக்க் குறையும் என்றும், ரூபாயின் பணவீக்கம் 10 விழுக்காடாக அதிகரிக்கும் என்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனை பேரவையின் தலைவர் சி. ரங்கராஜன் கூறியுள்ளார்.
பெங்களுருவிலுள்ள இந்திய விஞ்ஞானக் கல்விக் கழகத்தில் சர் வித்தால் என். சந்தாவர்கர் நினைவாக நடந்த நிகழ்ச்சியில் ‘இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் இன்று மாலை உரையாற்றிய பொருளாதார நிபுணர் ரங்கராஜன், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 8.5 விழுக்காடாக இருக்கும் என்று தனது தலைமையிலான பிரதமரின் பொருளாதார ஆலோசனை பேரவை கூறியிருந்தாலும், அது 8 விழுக்காடு அளவிற்குத்தான் இருக்கும் என்று கூறினார்.
இதற்கு காரணம், கடந்த நிதியாண்டில் கண்ட 4.5 விழுக்காடு விவசாய உற்பத்தி வளர்ச்சி இந்த ஆண்டு இருக்காது என்றும், சேவைத் துறையின் வளர்ச்சி உலகளாவிய அளவில் குறைந்துள்ளதும் ஆகும் என்று ரங்கராஜன் கூறினார்.
ரூபாயின் பணவீக்கம் 8.75 விழுக்காடாக உயர்ந்துள்ளது மிகவும் நெருக்கடியான நிலை என்றாலும், இதற்குமேல்தான் இன்னும் மோசமான நிலையை நாடு சந்திக்கப்போகிறது என்று கூறியவர், சமீபத்திய பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பணவீக்கம் 10 விழுக்காட்டை எட்டும் என்று கூறினார்.
சர்வதேச அளவில் கச்சா விலையேற்றம், வறட்சியின் காரணமாக ஆஸ்ட்ரேலியாவில் கோதுமை உற்பத்திக் குறைவு, உயிரி எரிவாயு தயாரிக்க சோளம் போன்றவற்றை பயன்படுத்தத் துவங்கியிருப்பது ஆகியன பணவீக்கத்திற்கான காரணங்கள் என்று கூறினார்.
பணப் புழக்கம் 20 விழுக்காடு அளவிற்கு அதிகரித்தது, சந்தைக்குத் தேவையான அளவிற்கு பொருட்கள் வருகையின்மை ஆகியன பணவீக்கத்திற்கான உள்நாட்டுக் காரணங்கள் என ரங்கராஜன் கூறினார்.
ஆயினும், கோதுமை கொள்முதல் 22 மில்லியன் டன்களாக அதிகரித்திருப்பது, பருவ மழை நன்கு பெய்யும் என்ற எதிர்ப்பார்ப்பு ஆகியன விலையுயர்வை கட்டுப்படுத்தும் என்றும், இதன் காரணமாக டிசம்பரில் பணவீக்கம் 7 விழுக்காடு அளவிற்கு குறையும் என்றும் ரங்கராஜன் கூறினார்.
நமது நாட்டில் நிலவும் வறுமையை ஒழித்து, பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த சில முக்கியமான சவால்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு கடந்த 10 ஆண்டுகளில் இருந்த அளவிற்கு விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றும் கூறினார்.
நமது நாட்டைப் பொறுத்தவரை, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல் உள்ளது என்றும், திறமையான நிர்வாகமே பொருளாதார வெற்றியையும், தோல்வியையும் தீர்மானிக்கிறது என்றும் ரங்கராஜன் கூறினார்.