பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாக மதிப்பிழந்த டாலர் என்ற காகிதத்தை தருகின்றனர் என்று ஈரான் அதிபர் அஹமதினெஜாத் கூறியுள்ளார்.
பன்னாட்டு வளர்ச்சிக்கான பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் நிதிக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு அஹமதினெஜாத் உரையாற்றினார்.
அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து கொண்டே வருவதால் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் தங்களது ரொக்கக் கையிருப்பை யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட உள்ளிட்ட சர்வதேச நாணயங்களுக்கு மாற்றிக் கொள்வது நல்லது என்று அஹமதினெஜாத் வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் பெட்ரோலிய ஒப்பந்தங்களுக்காக புதிய நாணயத்தை தயாரித்துக் கொள்ளவேண்டும் அல்லது டாலர் அல்லாத வேறு கரென்சிக்கு மாறவேண்டும் என்று கூறியுள்ளார். இவர் இது போன்று கூறுவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கச்சா விலை உயர்வு போலியானது!
-அஹமதினெஜாதின் கருத்தைப் பற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், இவ்வாறு நடந்தால் டாலர் மதிப்பு மேலும் மூழ்கிவிடும் என்று அச்சம் வெளியிட்டுள்ளனர். ஏனெனில் கச்சா எண்ணை கொள்முதல் செய்யும் பல நாடுகள் அமெரிக்க டாலர்களையே பரிமாற்றத்திற்கு பயன்படுத்தி வருகின்றன.
டாலர் மதிப்பு சரிவினால் அரிசி, கோதுமை மற்றும் எண்ணெய் விதைகள் விலை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ள அஹமதினெஜாத், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் காட்டிலும் நுகர்வு குறைவாக உள்ளது, சந்தையில் கச்சா எண்ணெய் இருப்பிற்கோ பஞ்சமில்லை, ஆனால் விலைகள் மட்டும் உயர்ந்து கொண்டேயிருக்கிறது, இந்த நிலை முற்றிலும் போலியானது, நம் மேல் திணிக்கப்பட்டது என்றார்.
சந்தையில் கச்சா எண்ணெய் கையிருப்பு ஏராளமாக உள்ளது என்பதை சௌதி அரேபியாவும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த வார இறுதியில் கச்சா உற்பத்தியை நாளொன்றுக்கு மேலும் 2 லட்சம் பேரல்களாக அதிகரிக்க உள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு அமெரிக்க சப் பிரைம் கடன் நெருக்கடியே காரணம் என்று ஈராக் எண்ணெய் வள அமைச்சர் ஹுஸைன் கூறியுள்ளார்.
பன்னாட்டு நிறுவனங்கள், குறிப்பாக மிகப்பெரிய அளவில் மூலதனம் உள்ள நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் துறையில் அதிக முதலீடு செய்து வந்தனர். ஆனால் அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள கடும் பின்னடைவால், இவர்கள் கச்சா எண்ணெய் மொத்த விற்பனை ஒப்பந்தங்களில் முதலீடு செய்கின்றனர். இதுதான் கச்சா விலை உயர்விற்கு காரணம் என்று ஹுசைன் அரபு மொழி தினசரி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.